சரிவில் இருந்து மீண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது கேப்டன் மிதாலிராஜ் பேட்டி


சரிவில் இருந்து மீண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது கேப்டன் மிதாலிராஜ் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2017 11:00 PM GMT (Updated: 16 July 2017 7:58 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறியுள்ளார்.

டெர்பி,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் டெர்பியில் நடந்த கடைசி லீக்கில் இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை புரட்டியெடுத்தது. இதில் கேப்டன் மிதாலிராஜின் சதத்தின் (109 ரன்) உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 266 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 25.3 ஓவர்களில் வெறும் 79 ரன்களில் சுருண்டு போனது. உலக கோப்பையில் ஆல்-அவுட் ஆன வகையில் நியூசிலாந்தின் மோசமான ஸ்கோர் இதுவாகும்.

அதே சமயம் உலக கோப்பையில் இந்தியாவின் மெகா வெற்றியாக இது பதிவானது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சிறந்த வெற்றியாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பையில் 4-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்த இந்திய அணி வருகிற 20-ந்தேதி நடக்கும் அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதிய கடைசி 8 ஆட்டங்களில் 7-ல் இந்தியா தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக மிதாலிராஜ் 7 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். இதன் மூலம் உலக கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் (இதற்கு முன்பு நியூசிலாந்தின் சுசி பேட்ஸ், ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் தலா 6 முறை) படைத்தார்.

வெற்றிக்கு பிறகு 34 வயதான மிதாலிராஜ் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதிக்கு முன்னேற முடியும் என்பதை வீராங்கனைகள் உணர்வுபூர்வமாக உணர்ந்து இருந்தனர். களத்தில் நன்றாக செயல்பட வேண்டும் என்ற வேட்கையில் இருந்தனர். அதை களத்தில் செய்து காட்டியிருக்கிறார்கள். இந்த மைதானத்தில் நாங்கள் ஏற்கனவே 4 ஆட்டங்களில் (பயிற்சி ஆட்டத்தையும் சேர்த்து) விளையாடி இருக்கிறோம். அதனால் ஆடுகளத்தன்மை மற்றும் அவுட் பீல்டு எப்படி இருக்கும் என்பதை நன்கு அறிவோம்.

தொடர்ந்து இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில், அதில் இருந்து மீண்டு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வகையில் இதை புதியதொரு இந்திய அணியாக கருதுகிறேன். முந்தைய தொடர்களில் எல்லாம், ஏதாவது ஒரு ஆட்டத்தில் மோசமான நிலையை சந்தித்தால், அதன் பிறகு ஒரு போதும் எழுச்சி பெற்றதில்லை. இதை கண்கூடாக பார்த்து இருக்கிறோம்.

ஆனால் இந்த முறை வலுவாக மீண்டுள்ளோம். எல்லா நேரமும் வெற்றி கிடைக்காது. ஆனால் எப்படி சரிவில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்புகிறோம் என்பதே முக்கியம். எங்களது வீராங்கனைகளுக்கு இது நல்ல வெற்றி. இது அவர்களுக்கு உத்வேகத்தையும், கூடுதல் நம்பிக்கையையும் கொடுக்கும்.

ஆஸ்திரேலிய அணி மிகச்சிறந்த அணி. வலுவான பேட்டிங் வரிசையை கொண்டது. சிறந்த பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே முடிவு அமையும். இதே போன்று தொடர்ந்து விளையாடினால் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பேட்டிங்கில் நான் இப்போது உச்ச நிலையில் இருக்கிறேன். கடந்த ஆண்டில் இருந்து நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். தேசத்திற்காக தொடர்ந்து ரன்கள் குவித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது.

இவ்வாறு மிதாலிராஜ் கூறினார்.

Next Story