இலங்கை, ஜிம்பாப்வே இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு: பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்


இலங்கை, ஜிம்பாப்வே இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு: பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்
x
தினத்தந்தி 17 July 2017 10:15 PM GMT (Updated: 2017-07-18T01:49:52+05:30)

இலங்கை– ஜிம்பாப்வே இடையே கொழும்பில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு உருவாகியுள்ளதால் முடிவை அறிய ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

கொழும்பு,

இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 356 ரன்களும், இலங்கை 346 ரன்களும் எடுத்தன. 10 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 3–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. சிகந்தர் ராசா (97 ரன்), மால்கம் வாலர் (57 ரன்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி 377 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. முதலாவது சதத்தை புசித்த சிகந்தர் ராசா 127 ரன்களும், வாலர் 68 ரன்களும், கேப்டன் கிரேமி கிரீமர் 48 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 388 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சொந்த மண்ணில் யாரும் எட்டிராத ஒரு சவாலான இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4–வது நாள் முடிவில் 48 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. தரங்கா 27 ரன்னிலும், கருணாரத்னே 49 ரன்களிலும், கேப்டன் சன்டிமால் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். குசல் மென்டிஸ் 60 ரன்களுடனும் (85 பந்து), முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 17 ரன்களுடனும் களத்தில் நிற்கிறார்கள். ஜிம்பாப்வே நேற்று முழுவதும் சுழற்பந்து வீச்சை மட்டுமே பயன்படுத்தியது. கேப்டன் கிரீமர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த டெஸ்ட் தற்போது பரபரப்பை கட்டத்தை அடைந்துள்ளது. கடைசி நாளில் இலங்கையின் வெற்றிக்கு 218 ரன்கள் தேவை. ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் அவசியம். இலங்கை ஆடுகளங்களில் கடைசி நாளில் பேட் செய்வது எளிதான காரியம் அல்ல. என்றாலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிப்பது கடினமே.

ஜிம்பாப்வே அணி இதுவரை இலங்கை அணியை டெஸ்டில் வென்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story