கிரிக்கெட்

“பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ததில் வருத்தமில்லை” இந்திய கேப்டன் கோலி சொல்கிறார் + "||" + Indian Captain Kohli says

“பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ததில் வருத்தமில்லை” இந்திய கேப்டன் கோலி சொல்கிறார்

“பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ததில் வருத்தமில்லை” இந்திய கேப்டன் கோலி சொல்கிறார்
கேப்டன் விராட் கோலி, பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ததில் வருத்தமில்லை என்று கூறினார்.
பல்லகெலே,

இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ததில் வருத்தமில்லை என்று கூறினார்.

பல்லகெலேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 47 ஓவர்களில் 231 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் (54 ரன்), ஷிகர் தவானும் (49 ரன்) முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்து சூப்பரான தொடக்கம் தந்தனர்.

இதன் பிறகு இலங்கை இளம் புயல், அகிலா தனஞ்ஜெயா சுழல் வித்தை காட்ட இந்திய வீரர்கள் திகைத்து போனார்கள். கேதர் ஜாதவ் (1 ரன்), கேப்டன் விராட் கோலி (4 ரன்), லோகேஷ் ராகுல் (4 ரன்), ஹர்திக் பாண்ட்யா (0), அக்‌ஷர் பட்டேல் (6 ரன்) அவரது சுழற்பந்து வீச்சுக்கு அடுத்தடுத்து இரையானார்கள்.

131 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியை விக்கெட் கீப்பர் டோனியும், புவனேஷ்வர்குமாரும் கைகோர்த்து மீட்டெடுத்தனர். இவர்களது உறுதிமிக்க பேட்டிங்கால் இந்திய அணி 44.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. புவனேஷ்வர்குமார் 53 ரன்களுடனும், டோனி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய கேப்டன் விராட் கோலி வழக்கமாக 3-வது வரிசையில் ஆடுவார். ஆனால் இந்த முறை லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவை முன்வரிசையில் இறக்கி விட்டு 5-வது வரிசையில் பேட் செய்தார். இந்த மூன்று பேரும் ஒரே மாதிரி ஸ்டம்புகள் தெறிக்க நடையை கட்டினர்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

விறுவிறுப்பு நிறைந்த ஆட்டமாக இது அமைந்தது. ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இந்த ஆட்டம் நல்ல பொழுது போக்காக இருந்திருக்கும். எப்படியோ இறுதியில் வெற்றி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 231 ரன்கள் இலக்கை 7 விக்கெட்டுகளை இழந்து எட்டுகையில், அதில் இரண்டு 100 ரன் பார்ட்னர்ஷிப் என்பது உண்மையிலேயே புதுமையானது. கிரிக்கெட்டில் இந்த மாதிரி அடிக்கடி நடக்காது.

231 ரன்கள் இலக்கை துரத்திய போது, 110-1 என்று நல்ல நிலையில் இருந்ததால் அனைவருக்கும் பேட்டிங் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அதனால் தான் பரீட்சார்த்த முயற்சியாக பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்தோம். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வழக்கமான 3-வது வரிசையில் இறங்கியிருந்தாலும் கூட அந்த குறிப்பிட்ட பந்தில் நான் ‘போல்டு’ தான் ஆகியிருப்பேன். ஏனெனில் தனஞ்ஜெயா அபாரமாக பந்து வீசினார்.

தனஞ்ஜெயாவை நாங்கள் நல்ல ‘லெக்-பிரேக்’குகள் வீசும் ஆப்-ஸ்பின்னர் என்று நினைத்தோம். ஆனால் அவர் 4 விக்கெட்டுகளை ‘கூக்ளி’ வகையில் வீசி கைப்பற்றினார். இதற்கு முன்பு எங்களுக்கு எதிராக அவர் விளையாடியதில்லை என்பதால் அவரது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடுவது கடினமாக இருந்தது. இப்போது அவர் எப்படி பந்து வீசுகிறார் என்பதை பார்த்து விட்டோம். இனி அவருக்கு எதிராக மிகுந்த எச்சரிக்கையோடு விளையாடுவோம். அவர், சரியான இடத்தில் பந்தை ‘பிட்ச்’ செய்து வீசிய விதம் பாராட்டுக்குரியது.

இவ்வாறு கோலி கூறினார்.

இலங்கைக்கு இது 800-வது ஒரு நாள் போட்டியாகும். இலங்கையை போன்றே ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் தங்களது 800-வது ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தன.

இலங்கை கேப்டன் தரங்கா கூறுகையில், ‘நெருங்கி வந்து தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. 100 ரன்கள் இந்திய அணிக்கு தேவையாக இருந்த சமயத்தில், நிறைய முயற்சி செய்தோம். ஆனால் டோனி-புவனேஷ்வர்குமார் ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஆனாலும் எங்களது பந்துவீச்சு, பீல்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.