கிரிக்கெட்

தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க இந்தியா, ஆஸ்திரேலியா கடும் போட்டி + "||" + Hold the number one on the rankings India, Australia, fierce competition

தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க இந்தியா, ஆஸ்திரேலியா கடும் போட்டி

தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க இந்தியா, ஆஸ்திரேலியா கடும் போட்டி
ஐ.சி.சி. ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மல்லுகட்டுகின்றன.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் வெளியிடப்படும் ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் தற்போது முதல் 5 இடங்களில் முறையே தென்ஆப்பிரிக்கா (119 புள்ளி), ஆஸ்திரேலியா (117 புள்ளி), இந்தியா (117 புள்ளி), இங்கிலாந்து (113 புள்ளி), நியூசிலாந்து (111 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.

இந்த நிலையில் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி சென்னையில் நடக்கிறது.

முந்தப்போவது யார்?

இந்த தொடரின் முடிவை பொறுத்து தரவரிசையில் மாற்றம் ஏற்படும். இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5–0 என்ற கணக்கில் புரட்டியெடுத்தால் 122 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தை பிடிக்க முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு தள்ளப்படும். 4–1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றினாலும் முதலிடம் (120 புள்ளி) உறுதி தான். அதே சமயம் 3–2 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றால் 118 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு முன்னேறும்.

இதே போல் ஆஸ்திரேலிய அணி 5–0 அல்லது 4–1 என்ற கணக்கில் தொடரை வசப்படுத்தும் பட்சத்தில், அந்த அணி மீண்டும் அரியணையில் ஏறி விடும். இந்த தொடரில் இந்திய அணி ஒரு வெற்றியும் பெறாமல் போனால் 112 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு பின்தங்கும்.

கோலிக்கு வாய்ப்பு

வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடும் தரவரிசையில் எதிரொலிக்கும். ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி கணிசமான ரன்கள் குவிக்கும் போது, முதலிடத்தை இன்னும் வலுப்படுத்திக்கொள்வதுடன் 900 தரவரிசை புள்ளிகளை எட்டிய முதல் இந்தியர் என்ற அரிய சிறப்பையும் பெற முடியும். ஆனால் வார்னர், அவரை முந்துவதற்கு பலமாக முயற்சிப்பார்.

ரோகித் சர்மா (9–வது இடம்), விக்கெட் கீப்பர் டோனி (10–வது இடம்), ஷிகர் தவான் (14–வது இடம்), ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (13–வது இடம்) உள்ளிட்டோரும் தரவரிசையில் முன்னேற்றம் அடைவதற்கு நல்ல வாய்ப்பு கனிந்துள்ளது.

அசத்துவாரா பும்ரா?

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டும், 3–வது இடம் வகிக்கும் மிட்செல் ஸ்டார்க்கும் காயத்தால் இந்திய பயணத்தில் இருந்து ஏற்கனவே ‘ஜகா’ வாங்கி விட்டனர். இதனால் 4–வது இடத்தில் இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விக்கெட் அறுவடை நடத்தும்பட்சத்தில் ஓரளவு ஏற்றம் காண முடியும். பும்ரா சமீபத்தில் இலங்கை தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர்நாயகன் விருதை பெற்றது நினைவு கூரத்தக்கது. 

அக்‌ஷர் பட்டேல் (10–வது இடம்), புவனேஷ்வர்குமார் (14–வது இடம்) ஆகிய இந்திய பவுலர்களும் தரவரிசையில் உயர்வை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.