தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி + "||" + The Indian team is a great success

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக ஹில்டன் கார்ட்ரைட், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட ஆரோன் பிஞ்ச், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில், ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இதன்படி டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். சிறிய மைதானம், பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் இவற்றை நேர்த்தியாக பயன்படுத்தி, இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

11-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை கேப்டன் கோலி கொண்டு வந்தார். அதற்கு பலன் கிட்டவில்லை. அவரது பந்துவீச்சில் வார்னர் ஒரு சிக்சரை பறக்க விட்டார்.

தொடக்க விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை, வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா பிரித்தார். அவரது பந்து வீச்சில் வார்னர் (42 ரன், 44 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித் நுழைந்தார்.

சுமித்தும், ஆரோன் பிஞ்சும், இந்திய சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். குறிப்பாக பிஞ்ச் அதிரடி காட்டி மளமளவென ரன்களை சேகரித்தார். அபாரமாக ஆடிய அவர் பவுண்டரி அடித்து தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். ஆசிய கண்டத்தில் அவரது முதல் சதம் இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை குறி வைத்து பதம் பார்த்த ஆரோன் பிஞ்ச், அவரது ஓவர்களில் மட்டும் 3 சிக்சர்களை நொறுக்கினார்.

பிஞ்ச்-சுமித் கூட்டணி ஆடிய விதத்தை பார்த்த போது ஆஸ்திரேலியா 350 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. அணியின் ஸ்கோர் 224 ரன்களாக (37.5 ஓவர்) உயர்ந்த போது, ஆரோன் பிஞ்ச் (124 ரன், 125 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் ஸ்டீவன் சுமித்தும் (63 ரன், 71 பந்து, 5 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அபாயகரமான பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் (5 ரன், 13 பந்து), யுஸ்வேந்திர சாஹலின் சுழலில், விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். நடப்பு தொடரில் மூன்று முறையும் அவர் சாஹலின் பந்து வீச்சுக்கே இரையாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் இறுதி கட்டத்தில் துல்லியமாக பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதனால் அவர்களின் ஸ்கோர் வெகுவாக தளர்ந்து, 300-ஐ கூட தொட முடியாமல் போனது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 293 ரன்கள் சேர்த்தது. கடைசி 12 ஓவர்களில் அந்த அணி வெறும் 69 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 294 ரன்கள் இலக்கை நோக்கி ரோகித் சர்மாவும், ரஹானேவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு பதிலடி கொடுத்த இவர்கள் அணிக்கு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து தந்தனர். கம்மின்ஸ், கவுல்டர்-நிலே, ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகரின் ஓவர்களில் ரோகித் சர்மா சிக்சர்கள் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். ரஹானேவும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்ப தவறவில்லை.

இருவரும் அரைசதங்களை கடந்த பிறகு ஆட்டம் இழந்தனர். ஸ்கோர் 139 ரன்களை (21.4 ஓவர்) எட்டிய போது ரோகித் சர்மா 71 ரன்களிலும் (62 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), ரஹானே 70 ரன்களிலும் (76 பந்து, 9 பவுண்டரி) வெளியேறினர்.

தொடக்க ஜோடி வெளியேறியதும் 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி கோலியும், 3-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யாவும் இறங்கினர். இந்த முறை முன்வரிசையில் ஆடும் வாய்ப்பை பெற்ற பாண்ட்யா வந்த வேகத்திலேயே அகரின் பந்து வீச்சில் ஒரு சிக்சர் விரட்டி அட்டகாசப்படுத்தினார். இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது.

நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத கேப்டன் விராட் கோலி 28 ரன்களிலும், கேதர் ஜாதவ் 2 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த சமயம் லேசான தடுமாற்றம் உருவானாலும் பாண்ட்யா, மனிஷ் பாண்டேவுடன் கைகோர்த்து அணியை சரியான பாதையில் பயணிக்க வைத்தார்.

பாண்ட்யாவிடம் சிக்கி சின்னாபின்னமானது சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தான். பாண்ட்யா மொத்தம் 4 சிக்சர்கள் தூக்கினார். இந்த 4 சிக்சரும் அவரது பந்து வீச்சில் அடிக்கப்பட்டவை தான். 41 ரன்னில் இருந்த போது கடினமான கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய பாண்ட்யா வெற்றியை நெருங்கிய நேரத்தில் 78 ரன்களில் (72 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.

இந்திய அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. மனிஷ் பாண்டே 36 ரன்களுடனும், டோனி 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. 4-வது ஒரு நாள் போட்டி வருகிற 28-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது.