சொந்த ஊர் ரசிகர்களின் மத்தியில் விடை பெறுகிறேன்; இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹரா பேட்டி


சொந்த ஊர் ரசிகர்களின் மத்தியில் விடை பெறுகிறேன்; இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹரா பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2017 11:15 PM GMT (Updated: 12 Oct 2017 7:52 PM GMT)

டெல்லியில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக இந்திய பவுலர் நெஹரா கூறியுள்ளார்.

ஐதராபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் 38 வயதான ஆஷிஷ் நெஹரா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நவம்பர் 1–ந்தேதி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விடைபெறுவதை விட பெரிய வி‌ஷயம் எதுவும் இருக்க முடியாது. அந்த வகையில் உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலி தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் தான் எனது முதலாவது ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கால் பதித்தேன். அதே இடத்தில் இப்போது ஓய்வு பெறுகிறேன்.

ஆஸ்திரேலிய 20 ஓவர் தொடருக்கு நான் வருகை தந்த போது, எல்லா போட்டிகளிலும் விளையாடுவதற்கு தயாராகி இருப்பதாக அணி நிர்வாகத்திடம் கூறினேன். என்னை பொறுத்தவரை அணிக்கு தேர்வாகி விட்டால், அதன் பிறகு களம் காண வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் அனைத்து 20 ஓவர் போட்டிகளிலும் நான் விளையாடி இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அந்த நிலைமை இப்போது மாறி விட்டதை அறிவேன்.

ஓய்வு திட்டத்தை அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் தெரிவித்தேன். ஒரே நாள் இரவில் ஓய்வு முடிவுக்கு வந்து விடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், அணியின் பொறுப்பை சுமந்து பந்து வீசுவதற்கு தயாராக உள்ளார். மேலும் பும்ராவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அது மட்டுமின்றி அடுத்த 5–6 மாதங்களுக்கு உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகள் எதுவும் இல்லை. அதனால் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். இது எனது சொந்த முடிவாகும்.

அணியின் ஓய்வறையில் வீரர்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமாகும். இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகள் என்னால் எளிதில் விளையாட முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மக்கள் கேள்வி எழுப்பும் முன்பே நல்ல நிலையுடன் ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

18 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து கேட்கிறீர்கள். என்னை பொறுத்தவரை இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு நாட்களும் மறக்க முடியாதவை தான். 2003–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதையோ அல்லது கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் (2004–ம் ஆண்டு) கடைசி ஓவரில் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்து வெற்றிக்கு வித்திட்டதையோ மறக்கமுடியாத நினைவுகளாக மக்கள் சொல்வார்கள். ஆனால் நான் அந்த மாதிரி நினைப்பதில்லை.

ஆனால் கேப்டன், கடைசி ஓவரை வீச அழைக்கும் போதெல்லாம் உற்சாகமாகி விடுவேன். 2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்றோம். முன்னதாக 2003–ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தோம். இப்படி ஏற்ற இறக்கத்தை பார்த்து இருக்கிறேன். அதனால் பசுமையான நினைவுகள் என்று குறிப்பிட்டு சொல்வது கடினம்.

ஓய்வுக்கு பிறகு எதிர்கால திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பு என்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. நவம்பர் 1–ந்தேதிக்கு பிறகே அது பற்றி முடிவு செய்வேன்.  இவ்வாறு நெஹரா கூறினார்.

காயத்துக்காக உடலில் 12 முறை ஆபரே‌ஷன் செய்ததையும், அதில் இருந்து மீண்டு கிரிக்கெட்டில் சாதித்ததையும் நெஹரா சுட்டிக்காட்டினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதில் விளையாட வாய்ப்பு உள்ளதா என்று கேட்ட போது ‘கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு எடுத்து விட்டால் முற்றிலும் வெளியேறி விட வேண்டும். அதனால் இனி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கமாட்டேன்’ என்றும் நெஹரா பதில் அளித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் இரண்டு முறை 6 விக்கெட்டுகள் சாய்த்த ஒரே இந்திய பவுலர் நெஹரா என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story