தொடரை வெல்லப்போவது யார்? கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்


தொடரை வெல்லப்போவது யார்? கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
x
தினத்தந்தி 12 Oct 2017 10:45 PM GMT (Updated: 12 Oct 2017 8:56 PM GMT)

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

ஐதராபாத்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. ஒரு நாள் தொடரை 1–4 என்ற கணக்கில் பறிகொடுத்த ஆஸ்திரேலியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1–1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. கோப்பையை வசப்படுத்த இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மழை பாதிப்புக்குள்ளான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்களுக்கு கட்டுபடுத்தப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் அதே ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி ஆஸ்திரேலியா பதிலடி தந்தது. மிடில் ஓவர்களில் தான் தடுமாற்றம் தெரிகிறது. அதில் இரு அணியினரும் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

இந்திய அணியை பொறுத்தவரை அனேகமாக மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல் சேர்க்கப்படலாம். மற்றபடி நெஹராவுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

ஐதராபாத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் மழையால் ஆட்டம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இங்கு இதற்கு முன்பு சர்வதேச 20 ஓவர் போட்டி நடந்ததில்லை. அதே சமயம் நிறைய ஐ.பி.எல். ஆட்டங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் பார்த்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் கணிசமான விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சின் தாக்கம் நிச்சயம் காணப்படும்.

ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் வார்னரின் ஐ.பி.எல். மைதானம் இது என்பது அவர்களுக்கு சாதகமான ஒரு அம்சமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் (கேப்டன்), ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் பெய்ன், நாதன் கவுல்டர்–நிலே, ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, ஜாசன் பேரென்டோர்ப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story