வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி டிவில்லியர்சின் அபார சதத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி


வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி டிவில்லியர்சின் அபார சதத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி
x
தினத்தந்தி 18 Oct 2017 10:45 PM GMT (Updated: 18 Oct 2017 10:03 PM GMT)

வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டிவில்லியர்சின் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

பார்ல்,

வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த வங்காளதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

கிம்பெர்யில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக வென்றது. இதன்மூலம் 0-1 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. இந்த நிலையில் தொடரை கைப்பற்ற எஞ்சிய போட்டிகளை வென்று ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வங்காளதேச அணி தள்ளப்பட்டது.

இந்த நிலையில் பார்ல் பகுதியில் உள்ள போலந்து பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களம் இறங்கிய தென்ஆப்பரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்லாவும், குயின்டன் டிகாக்கும் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை திரட்டிய நிலையில் டிகாக் (46 ரன்கள், 61 பந்துகள்) ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து களம் கட்ட டூபிளசிஸ் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஆட்டத்தை இழந்து அதிர்ச்சி அளித்தார்.

இருப்பினும் அடுத்து வந்த டிவில்லியர்ஸ் வழக்கம் போல் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பவுண்டரிகளை நோக்கி பந்துகளை விரட்டிய அம்லா- டிவில்லியர்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டிற்கு 136 ரன்கள் திரட்டியது. இந்த நிலையில் அம்லா 85 ரன்கள்(92 பந்துகள்) எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இருப்பினும் தொடர்ந்து மைதானத்தை சுற்றி பந்துகளை பறக்கவிட்டு வானவேடிக்கை காண்பித்த டிவில்லியர்ஸ் தனது 25-வது சதத்தை கடந்தார். மைதானத்தில் இருந்த பார்வையாளர்களை குஷிபடுத்திய டிவில்லியர்ஸ் 104 பந்துகளில் 176 ரன்கள்( 15 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன்மூலம் அந்த அணி 50 ஓவர் முடிவில் 353 ரன்கள் சேர்த்தது.

கடினமான இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணியில் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்க தவறிவிட்டனர். தென்ஆப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியின் வீரர்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அந்த அணி தரப்பில் இம்ருல் கயீஸ்( 68 ரன்கள்), முஷ்பிகுர் ரகீம் (60 ரன்கள்) ஆகியோர் அரைசதத்தை கடந்தும் அவர்களால் தென் ஆப்பிரிக்காவின் இமாலய இலக்கை எட்டிப்பிடிக்க முடியவில்லை. அந்த அணி 47.5 ஓவர்களில் 249 ரன்னுக்கு ஆல்- அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 104 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் அடீலே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Next Story