வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ் 176 ரன்கள் குவித்து அசத்தல்


வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ் 176 ரன்கள் குவித்து அசத்தல்
x
தினத்தந்தி 19 Oct 2017 9:15 PM GMT (Updated: 19 Oct 2017 8:28 PM GMT)

தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் நடந்தது.

பார்ல்,

தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 353 ரன்கள் குவித்தது. 18-வது ஓவரில் களம் புகுந்த டிவில்லியர்ஸ் 68 பந்துகளில் தனது 25-வது சதத்தை நிறைவு செய்ததுடன், 176 ரன்கள் (104 பந்து, 15 பவுண்டரி, 7 சிக்சர்) திரட்டி கேட்ச் ஆனார். 48-வது ஓவரில் டிவில்லியர்ஸ் வீழ்ந்தார். ஒரு நாள் போட்டியில் டிவில்லியர்சின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இப்போது தென்ஆப்பிரிக்க வீரர்களில் அதிவேகமாக சதம் கண்ட டாப்-10 பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் 8-ல் டிவில்லியர்ஸ் தான் இருக்கிறார். இதுவரை 201 சிக்சர்கள் நொறுக்கியுள்ள டிவில்லியர்ஸ் 200-க்கு மேல் சிக்சர் அடித்த 6-வது வீரர் (முதல் 5 இடங்களில் அப்ரிடி, ஜெயசூர்யா, கிறிஸ் கெய்ல், டோனி, பிரன்டன் மெக்கல்லம்) என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ந்து பேட் செய்த வங்காளதேச அணி 47.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 22-ந்தேதி நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான தென்ஆப்பிரிக்க அணியில் அம்லாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, எய்டன் மார்க்ராம் அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியது. இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் தலா 120 புள்ளிகள் பெற்றிருந்தாலும் மயிரிழையில் தென்ஆப்பிரிக்கா முந்தி நிற்கிறது. முதலிடத்தை பறிகொடுத்த இந்தியா 2-வது இடம் வகிக் கிறது.

Next Story