கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் இரட்டை சதம் அடித்து அபாரம்! இலங்கை அணிக்கு இமாலய இலக்கு! + "||" + 2nd ODI Mohali Rohit Sharma s record double ton powers IND to 392/4

2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் இரட்டை சதம் அடித்து அபாரம்! இலங்கை அணிக்கு இமாலய இலக்கு!

2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் இரட்டை சதம் அடித்து அபாரம்! இலங்கை அணிக்கு இமாலய இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 393 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயம் செய்து உள்ளது.
மொகாலி, 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது. இப்போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போட்டியாகவே தொடங்கியது. இதிலும் மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும் என்ற நிலையில் இந்திய அணி தொடக்கம் முதலே அபாரம் காட்டியது. 

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இன்றைய போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சை துவைத்து எடுத்தார். 

போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்து, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. முதல்நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இன்றைய போட்டியில் அந்த தவறை செய்யக்கூடாது என்பதில் தொடக்க ஆட்டக்காரர்கள் உறுதியாக விளையாடினர். தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா நேர்த்தியான ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்திய அணி 21.1 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து இருந்த போது ஷிகர் தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் ஷர்மாவுடன் கை கோர்த்த ஷ்ரேயாஸ் ஐயரும் தன்னுடைய வேகத்தை காட்டினார். இருவரும் இலங்கை அணிக்கு எதிராக சவாலான ஒரு கூட்டணியை அமைத்து விளையாடினர். 

45.3 வது ஓவரில் இந்தியா 328 ரன்களை எட்டிய போதுதான் இலங்கை அணிக்கு அடுத்த விக்கெட் கைக்கு எட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இரட்டை சதம் நோக்கி விளையாடிய ரோகித் ஷர்மாவுடன் இந்தியாவின் நட்சத்திர வீரர் டோனி இணைந்தார். ஆனால் முதல்நாள் ஆட்டம் போல் டோனி நீடிக்கவில்லை. 5 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். 49.3 வது ஓவரில் ரோகித் ஷர்மா இரட்டை சதம் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தார். மைதானத்தில் இருந்த வீரர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர். அடுத்த பந்தில் சிக்சர் அடித்து ரசிகர்களை மேலும் குஷிபடுத்தினார். கடைசி பந்தை எதிர்க்கொண்ட ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 392 ரன்கள் எடுத்து இருந்தது. இலங்கை அணிக்கு 393 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்தியா 147 ரன்களை குவித்தது, ரோகித் ஷர்மா இந்த ஓவர்களில் மட்டும் 99 ரன்களை அடித்தார். முதல் சதத்தை 115 பந்துகளில் அடித்தார், இரட்டை சதத்தை 36 பந்துகளில் எடுத்தார். இறுதியில் ரோகித் ஷர்மா 208 ரன்களில் ஆட்டம் இழக்காமல் கழத்தில் இருந்தார். அவரது ஸ்கோரில் 13 பவுண்டரிகளும், 12 சிக்சர்களும் அடங்கும்.  ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் ஷர்மாவின் மூன்றாவது இரட்டைசதம் இதுவாகும்.