இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக நரிந்தர் பத்ரா தேர்வு


இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக நரிந்தர் பத்ரா தேர்வு
x
தினத்தந்தி 14 Dec 2017 11:30 PM GMT (Updated: 14 Dec 2017 10:33 PM GMT)

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக சர்வதேச ஆக்கி பெடரேஷன் தலைவர் நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் 2017-2021-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் பிரேந்திர பைஸ்யா போட்டியில் இருந்து விலகினார். இதேபோல் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்து இருந்த ஆசிய டென்னிஸ் பெடரேஷன் தலைவர் அனில் கண்ணா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ஒதுங்கியதுடன், நரிந்தர் பத்ராவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் வேட்பு மனு வாபஸ் காலகெடு முடிந்த பின்னர் அனில் கண்ணா வாபஸ் பெற்றதால் அவரது வாபஸ் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனால் தலைவர் பதவிக்கு நரிந்தர் பத்ரா, அனில் கண்ணா இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் நரிந்தர் பத்ரா 142 ஓட்டுகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அனில் கண்ணா 13 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். பொதுச்செயலாளர் பதவிக்கு ராஜீவ் மேக்தா மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வானார். பொருளாளர் போட்டியில் ஆனந்தேஷ்வர் பாண்டே வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து நின்ற ராகேஷ் குப்தாவை தோற்கடித்தார்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட 60 வயதான நரிந்தர் பத்ரா அளித்த பேட்டியில், ‘2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி, 2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான திட்டங்களை இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மத்திய அரசிடம் தாக்கல் செய்வோம்.

இது போன்ற பெரிய போட்டிகளை அரசு நிதி உதவி அளிப்பதை பொறுத்து தான் நடத்த முடியும். சர்வதேச சம்மேளனங்களால் நடத்தப்படும் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடும். இருநாடுகள் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாத வரை பாகிஸ்தானுடன் நேரடி போட்டித் தொடரில் இந்திய அணி விளையாடுவது முடியாத விஷயம் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.

Next Story