கிரிக்கெட்

இளம்புயல் பிரித்வி! + "||" + Young storm Prithvi!

இளம்புயல் பிரித்வி!

இளம்புயல் பிரித்வி!
பிரித்வியை பார்த்து பிரமிப்பு அடைபவர்கள் சாதாரண ரசிகர்கள் மட்டுமில்லை, பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களும் கூடத்தான்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தோன்றிய அதே மும்பை மண்ணில் இருந்து இன்னொரு அதிரடி கிரிக்கெட் வீரர் உருவாகி வருகிறார்.

அவர், நியூசிலாந்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும், பிரித்வி ஷா.

இவர் கடந்த மாதம்தான் 18 வயதை எட்டினார். ஆனால் அதற்குள், பள்ளிகளுக்கு இடையிலான தொடர்கள் தொடங்கி ரஞ்சி, துலீப் கோப்பை தொடர்கள் வரை பல சாதனைகளைத் தகர்த்துவிட்டார்.

அதிரடி... சரவெடி...

பள்ளிகளுக்கு இடையிலான தொடர்களில் சதம் சதமாய் ரன் குவித்த பிரித்வி, மும்பை ரஞ்சி அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரராய் புயல் கிளப்புகிறார்.

கடந்த ஜனவரி மாதம்தான் பிரித்வி முதல்தரப் போட்டி பிரவேசமாக ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுகமானார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம், அதன்பின் தான் ஆடிய மொத்தம் 5 போட்டிகளில் 4 சதம், ஒரு அரைச்சதம் என்று அசத்தியிருக்கிறார்.

கடந்த செப்டம்பரில் துலீப் கோப்பை தொடரில் பேட் பிடித்த பிரித்வி, அறிமுகமான முதல் தொடரிலேயே சதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன் அந்த இடத்தில் இருப்பவர், ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின்.

பிரித்வியையும் கூட ‘அடுத்த சச்சின்’ என்று புகழத் தொடங்கிவிட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ளத்தான் பிரித்வியும் அவரது தந்தை பங்கஜ் ஷாவும் தயங்குகின்றனர்.

ஆனால், இளவயது சச்சின் போல பிரித்வியும் பள்ளி நாட்களிலேயே பிரகாசிக்கத் தொடங்கியவரே.

சச்சினும் பிரித்வியும்

மும்பையில் பள்ளிகளுக்கு இடையிலான பிரதான தொடர்களான ஹாரீஸ் ஷீல்டு மற்றும் கைல்ஸ் ஷீல்டு போட்டிகளில் சச்சின் மூட்டை மூட்டையாய் ரன் குவித்தது வரலாறு. அதன் உச்சமாக, 1998-ல் வினோத் காம்ப்ளி உடனான 640 ரன் உலக சாதனை ரன் குவிப்பில் ஆட்டமிழக்காமல் 326 ரன்கள் சேர்த்தார் சச்சின். அதேபோல கடந்த 2013- 2014-ல் ‘546’ ரன்கள் சாதனையில் பிரித்வியின் பெயர் இருக்கிறது.

பள்ளி நாட்களைக் கடந்து சச்சின் படபடவென்று உயர்ந்து கிரிக்கெட் சரித்திரத்தில் நிரந்தர இடம்பெற்றுவிட்டார். சதத்தில் சதம் அடித்துவிட்டார்.

ஆனால் பிரித்வி இனிமேல்தான் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். என்றபோதும் பிரித்வியின் 18 ஆண்டு கால வாழ்க்கை சச்சினுடையதைப் போல சீராக இல்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

கடந்துவந்த கடினப் பாதை

பிரித்வி தனது 4 வயதுக்குள்ளாக அம்மாவை இழந்துவிட்டார். பொறுப்பான, அக்கறையான அப்பாதான் தனது ஜவுளித் தொழிலை விட்டுவிட்டு பிரித்வியின் கிரிக்கெட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துவிட்டார். ஆக, பிரித்வியின் வளர்ச்சியில் அவரது அப்பா பங்கஜுக்கு பிரதான பங்கு இருக்கிறது.

சச்சின் தெண்டுல்கரைப் போல பிரித்வியும் ரன் குவிப்பில் தணியாத தாகம் கொண்டவராக இருக்கிறார். அதுவும் இவர்கள் இருவரையும் பலரும் ஒப்பிட்டுப் பேச ஒரு காரணமாக இருக்கிறது.

சச்சின் தனது 18 வயதுக்குள்ளாக முதல்தரப் போட்டிகளில் 7 சதங்கள் விளாசிவிட்டார். அப்படிப் பார்த்தால், பிரித்வி 3 சதங்கள் குறைவாக அடித்திருக்கிறார். ஆனால் இந்த 12-ம் வகுப்பு பையன் எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் எவ்வளவு சாதிப்பார் என்று எவராலும் கணிக்க முடியவில்லை.

வல்லுநர்களின் பாராட்டு

பிரித்வியை பார்த்து பிரமிப்பு அடைபவர்கள் சாதாரண ரசிகர்கள் மட்டுமில்லை, பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களும் கூடத்தான். உதாரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய அசாம் அணியின் பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புத்...

“பிரித்வி மிகவும் நேர்மறை அணுகுமுறை கொண்ட வீரர். அவர் தனது ‘ஷாட்’டுகளை கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. விதவிதமான ஷாட்களும் விளாசக்கூடியவர். ‘பிட்ச்’ எப்படியிருந்தாலும், அடிக்கவேண்டிய பந்து என்றால் அதை பிரித்வி அடிப்பார். சுழல் வீச்சையும் அவர் எளிதாக தூக்கி அடிப்பார். பிரித்வி விளையாடிவரும் வேகத்தைப் பார்த்தால், அவர் நிச்சயம் தேசிய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்” என்றார்.

ரஞ்சிக் கோப்பையை வென்ற மும்பை அணியின் கேப்டனாக திகழ்ந்தவரான அமோல் மசும்தார், ரஞ்சி, துலீப் தொடர்களில் முதல் பிரவேசத்திலேயே பிரித்வி பிரமாதப்படுத்திய சதங்களைப் பார்த்திருக்கிறார். அவர் கூறுகிறார்...

“என்னை முதலில் கவர்ந்த விஷயம், பிரித்வியின் தெளிவான ஆட்டம். குறிப்பாக துலீப் இறுதிப்போட்டியில் அவரது தற்காப்பு என்னை மிகவும் கவர்ந்தது. லக்னோவின் எகானா சர்வதேச ஸ்டேடியத்தில் பந்து நன்றாக சுழன்று திரும்பும் பிட்சில் அவர் 154 ரன்கள் குவித்தது அசாதாரணம். ஒரு வீரரின் தற்காப்பு ஆட்டத்தை வைத்தே நாம் அவரை மதிப்பிட்டுவிடலாம்.”

நிதி ஆதரவு

பேட்டால் பட்டாசு கொளுத்தியதற்கு பிரித்விக்கு பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. மீரட்டைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் உபகரண தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இவருக்கு ஆறாண்டு காலத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கி ஆதரவளிக்க முன்வந்திருக்கிறது. பிரித்வி 546 ரன்கள் குவித்து மலைப்பூட்டியதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2014-ல் இவரது 14 வயதில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ‘ஸ்பான்சர்ஷிப்’, பிரித்வியை நிதி விஷயம் பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைத்திருக்கிறது. மும்பையின் புறநகர்ப்பகுதியான விராரில் இருந்து நகருக்குள் சாந்தா குரூசில் இவரால் இடம்பெயர முடிந்திருக்கிறது. இது, கிரிக்கெட் பயிற்சிக்காக பிரித்வி பயணம் செய்யும் தூரத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது.

பிரித்வி அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் அதிகம் கஷ்டப்பட்டவர், அவர் அப்பா பங்கஜ்தான்.

“விராரில் இருந்து பாந்திரா செல்லும் புறநகர் ரெயிலை காலை 6.10-க்கெல்லாம் பிரித்வி பிடிக்க வேண்டும். அதில் ஒரு மணி நேரம் 20 நிமிடப் பயணம். அதன்பிறகு 20 நிமிடம் பஸ்சில் பயணித்து அவன் தனது பயிற்சி மைதானத்தை அடைய வேண்டும். பிரித்விக்காக நான் அதிகாலையிலேயே எழுந்து சமைத்து எடுத்துக்கொண்டு அவனுடன் செல்வேன். பயிற்சி முடிந்து அவன் வகுப்பறை சென்றதும், நான் பள்ளி வளாகத்திலேயே உலாத்திக்கொண்டிருப்பேன்” என்று சொல்கிறார், இந்த அன்பான அப்பா.

தெரு கிரிக்கெட் பார்த்து...

பிரித்வி ஆரம்பத்தில் ஈர்க்கப்பட்டது, தெருவில் பையன்கள் விளையாடும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டை பார்த்துத்தான். அவனை கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுத்தும்படி யோசனை கூறியது, பங்கஜின் கிரிக்கெட் நண்பர்கள்தானாம்.

பிரித்வியிடம் நல்ல கிரிக்கெட் திறமை இருப்பதை தொடக்கத்தில் கண்டறிந்தவர், அவனது ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜு பதக். பிரித்வியின் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.

“பெரிய சதங்கள் அடிக்கக்கூடிய பிரித்வி, நன்கு செட்டிலான பிறகு அவுட்டாவதை மட்டும் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.

டிராவிட்டின் கருத்து

இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும் பிரித்வியை அருகே இருந்து கவனித்திருக்கிறார். அவர் தனக்கே உரிய பாணியில் எச்சரிக்கையாகச் சொன்னது...

“பிரித்வி இன்னும் நிறைய தூரம் போக வேண்டும், நிறையக் கற்க வேண்டும். இவரைப் போன்ற இளம் திறமையாளர்களை இப்போதே எல்லாம் அறிந்தவர்கள் என்று கூறிவிடக்கூடாது. அவர்கள் கற்றுக்கொண்டே இருக்கின்றனர். இன்னும் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.”

டிராவிட் இப்படிக் கூறியது கடந்த ஜனவரியில். அதன்பிறகு பிரித்வி சில அடிகள் முன்னேறியிருக்கிறார், இங்கிலாந்தில் ஆடிய அனுபவமும் பெற்றிருக்கிறார்.

ஆனால் இப்போதே அதீதமாகப் புகழ்ந்து பிரித்வியை வீணடித்துவிடக்கூடாது என்ற அக்கறை டிராவிட் போன்ற ஜாம்பவான்களுக்கு இருக்கிறது. அதையேதான் தந்தை பங்கஜும் பிரதிபலிக்கிறார்.

“பிரித்வியை இப்போதே வெற்றிகரமான கிரிக்கெட் வீரன் என்று நான் கூற மாட்டேன். அவன் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.”

ஆனால், சாதிப்பார் என்ற நம்பிக்கையை பிரித்வி ஏற்படுத்தியிருப்பதே வெற்றிதான். இந்திய அணியில் நுழைவதற்கு இவர் சீனியர் வீரர்களுக்கு என்ன நெருக்கடியை ஏற்படுத்துகிறார் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்! 

அதிகம் வாசிக்கப்பட்டவை