கிரிக்கெட்

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 549 ரன்கள் குவிப்பு + "||" + Ashes 3rd Test

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 549 ரன்கள் குவிப்பு

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 549 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 549 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஸ்டீவன் சுமித் இரட்டை சதம் விளாசினார்.
பெர்த்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 92 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அபாரமாக ஆடிய ஸ்டீவன் சுமித் 138 பந்துகளில் தனது 22-வது சதத்தை எட்டினார். இது அவரது அதிவேக சதமாகும். சிறிது நேரத்தில் ஷான் மார்ஷ் (28 ரன்) மொயீன் அலியின் பந்து வீச்சில் கேப்டன் ஜோரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து அவரது சகோதரரான ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கேப்டன் ஸ்டீவன் சுமித்துடன் இணைந்தார். 9 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ் அதிரடி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். இங்கிலாந்து பவுலர்களை மிரள வைத்த மிட்செல் மார்ஷ் 130 பந்துகளில் தனது முதல் சதத்தை ருசித்தார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

மறுமுனையில் நங்கூரம் போல் நிலை கொண்டு அசத்திய ஸ்டீவன் சுமித் இரட்டை சதத்தையும் கடந்தார். அவருக்கு இது 2-வது இரட்டை சதமாகும். தனது முதலாவது இரட்டை செஞ்சுரியையும் (215 ரன், 2015-ம் ஆண்டில்) அவர் இங்கிலாந்துக்கு எதிராகவே அடித்து இருந்தார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 152 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 549 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித் 390 பந்துகளில் 28 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 229 ரன்னும், மிட்செல் மார்ஷ் 234 பந்துகளில் 29 பவுண்டரியுடன் 181 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 146 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆஸ்திரேலிய கேப்டன் 28 வயதான ஸ்டீவன் சுமித் இந்த இன்னிங்சில் 112 ரன்களை எட்டிய போது, இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் (2014-2017) டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களுக்கு மேல் சேர்தத 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தொடர்ந்து 5 ஆண்டுகளில் இவ்வாறு ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார். அதே சமயத்தில் 60 ரன்களுக்கு மேல் சராசரியுடன் தொடர்ந்து 4 ஆண்டுகள் ஆயிரம் ரன்னை கடந்த ஒரே வீரர் ஸ்டீவன் சுமித் தான்.

* டெஸ்ட் போட்டியில் 22 சதங்கள் அடித்து இருக்கும் ஸ்டீவன் சுமித் இதனை தனது 108-வது இன்னிங்சில் எட்டி இருக்கிறார். 22 சதங்களை அதிவேகமாக எட்டிய 3-வது வீரர் ஸ்டீவன் சுமித் ஆவார். இந்த வகையில் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பிராட்மேன் (58 இன்னிங்ஸ்), இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் (101 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர். இந்த சாதனை பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் (114 இன்னிங்ஸ்) 4-வது இடம் வகிக்கிறார்.

* பெர்த் மைதானத்தில் கேப்டனாக இரட்டை சதம் அடித்த முதல் நபர் ஸ்டீவன் சுமித் தான்.

ஸ்டீவன் சுமித்தின் இரட்டை சதம் குறித்து இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பதிவில், ‘என்ன ஒரு அற்புதமான வீரர் ஸ்டீவன் சுமித். அவர் அவுட் ஆகிற மாதிரி தெரியவில்லை. அருமையான ஆட்டம்’ என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் இந்திய கேப்டன் விராட் கோலி. ஆனால் டெஸ்ட் போட்டியில் சிறந்தவர் ஸ்டீவன் சுமித்’ என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் - மார்ஷ் சகோதரர்கள் நீக்கம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் சகோதரர்கள் நீக்கப்பட்டனர்.
2. உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி
உலக கோப்பை ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றிபெற்றது.
3. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு
20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.