கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல் + "||" + Last one day match India-Sri Lanka confrontation today

கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
விசாகப்பட்டினம்,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.


இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

திருமணம் காரணமாக விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்றார். தர்மசாலாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆடுகளத்தன்மையை சரியாக கணிக்காமல் இந்திய வீரர்கள் 112 ரன்களில் முடங்கி மோசமான தோல்வியை சந்தித்தனர். அடுத்து மொகாலியில் சுதாரித்துக் கொண்ட இந்திய வீரர்கள் இலங்கை பந்து வீச்சை பஞ்சராக்கியதுடன் 392 ரன்கள் குவித்து மலைக்க வைத்தனர். கேப்டன் ரோகித் சர்மா 3-வது இரட்டை சதம் விளாசி சாதனை புரிந்தார். ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அரைசதங்களும் ரன் உயர்வுக்கு முக்கிய பங்கு வகித்தன. அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் கோலோச்சி, வெற்றிக்கனியை பறிக்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர்.

விசாகப்பட்டினம், இந்திய அணிக்கு ராசியான ஒரு மைதானமாகும். இங்கு இந்திய அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை 79 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்திய விக்கெட் கீப்பர் டோனி 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமாகும். பொதுவாக இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். அத்துடன் சுழற்பந்து வீச்சும் எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியை பொறுத்தவரை இந்திய மண்ணில், இரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதாக வரலாறு கிடையாது. இந்த முறை அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வேகத்துடன் வரிந்து கட்டி நிற்பார்கள். மேத்யூஸ் தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டம் நிலையானதாக இல்லை. ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால், இலங்கையும் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா.

இலங்கை: உபுல் தரங்கா, குணதிலகா, திரிமன்னே அல்லது சமரவிக்ரமா, மேத்யூஸ், டிக்வெல்லா, குணரத்னே, திசரா பெரேரா (கேப்டன்), பதிரானா, லக்மல், அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

“இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் (கொல்கத்தா) மற்றும் முதலாவது ஒரு நாள் போட்டிக்கு (தர்மசாலா) பிறகு நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளோம். இவ்விரு ஆடுகளங்களும் ஈரப்பதமாக இருந்தன. பந்து வேகமாக நகர்ந்தன. இருப்பினும் நாங்கள் நேர்மறையான எண்ணத்துடன் தான் விளையாடினோம். ஆனால் நினைத்த மாதிரி ஆட்டத்தின் போக்கு அமையவில்லை. சில நேரம் வீழ்ச்சியை சந்திக்கும் போது தான் கற்றுக்கொள்ள வழிபிறக்கும். அதாவது தர்மசாலாவில் தோல்வி அடைந்து, மொகாலி ஒரு நாள் போட்டியில் களம் இறங்கிய போது அந்த ஆடுகளமும் ஈரப்பதமாகவே இருந்தது. ஆனால் தொடக்கத்தில் கவனமுடன் செயல்பட்டு, 10 ஓவர்களுக்கு பிறகு ஆட்டத்தின் போக்கை மாற்றினோம். ஏற்கனவே சொன்ன மாதிரி, தவறுகளை திருத்திக்கொண்டு விளையாடினோம்” - இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான்.

“விசாகப்பட்டினத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை, எங்கள் நாட்டில் உள்ளது போன்றே இருக்கிறது. அதனால் உள்ளூரில் சிறப்பாக ஆடுவது போன்று இங்கும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்காக சிறந்த முறையில் தயாராகி இருக்கிறோம். இதை இன்னொரு சாதாரண ஆட்டமாகவே எடுத்துக் கொண்டு விளையாடுவோம். அதே சமயம் உலகின் தலைச்சிறந்த அணியாக விளங்கும் இந்தியாவுக்கு நிச்சயம் நெருக்கடி இருக்கும்.

கடந்த ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சு ‘கிளிக்’ ஆகவில்லை. ரோகித் சர்மா, ஷிகர் தவானின் விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்த சில திட்டங்களை வகுத்துள்ளோம். அந்த திட்டங்களை பவுலர்கள் களத்தில் எப்படி செயல்படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்தே எல்லாம் அமையும். முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு எழுச்சி பெற விரும்புகிறோம்.” - இலங்கை கேப்டன் திசரா பெரேரா