ரஞ்சி கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: கர்நாடகா அணி முன்னிலை


ரஞ்சி கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: கர்நாடகா அணி முன்னிலை
x
தினத்தந்தி 18 Dec 2017 10:30 PM GMT (Updated: 18 Dec 2017 6:53 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுள்ளது.

கொல்கத்தா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் நடைபெறும் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடகா-விதர்பா அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 61.4 ஓவர்களில் 185 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடகா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்து இருந்தது. கருண்நாயர் 6 ரன்னுடனும், கவுதம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கருண்நாயர், கவுதம் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 160 ரன்னாக உயர்ந்த போது கவுதம் (73 ரன்கள்) உமேஷ்யாதவ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த இணை 139 ரன்கள் சேர்த்தது.

பின்னர் வந்த வீரர்களான ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்), கோபால் (7 ரன்), கே.கவுதம் (1 ரன்), அபிமன்யு மிதுன் (10 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், மறுமுனையில் கருண்நாயர் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். நேற்றைய ஆட்டம் முடிவில் கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 93 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. கருண்நாயர் 261 பந்துகளில் 20 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 148 ரன்னும், கேப்டன் வினய்குமார் 20 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. கர்நாடக அணி 109 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி கைவசம் 2 விக்கெட்டுகள் உள்ளது.

பெங்கால்-டெல்லி அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் புனேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய பெங்கால் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 94.2 ஓவர்களில் 286 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குனால் சன்டிலா, கவுதம் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 232 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. சன்டிலா 113 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட துருவ் ஷோரி 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். கம்பீர் 127 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் டெல்லி அணி முதல் இன்னிங்சில் 77.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா 11 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. டெல்லி அணி 15 ரன்கள் பின்தங்கி உள்ளது. அந்த அணி கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது.

Next Story