வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி வெற்றி


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 20 Dec 2017 9:30 PM GMT (Updated: 20 Dec 2017 8:16 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வான்கரேவில்,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலாவது ஒருநாள் கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் நியூசிலாந்து–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வான்கரேவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி வெற்றி

வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக இவின் லீவிஸ் 76 ரன்னும், போவெல் 59 ரன்னும் எடுத்தனர். அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் 31 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டும், ஆஸ்ட்லே 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காலின் முன்ரோ 49 ரன்னிலும், ஜார்ஜ் ஒர்கெர் 57 ரன்னிலும், கேப்டன் கனே வில்லியம்சன் 38 ரன்னிலும், டாம் லாதம் 17 ரன்னிலும், நிகோல்ஸ் 17 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும், ஆஸ்ட்லே 15 ரன்னுடனும் களத்தில் நின்றனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர், ஆஸ்லே நர்ஸ் தலா 2 விக்கெட்டும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அடுத்த ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வருகிற 23–ந் தேதி நடக்கிறது.


Next Story