இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது: தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு வலுவாக இருக்கிறது


இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது: தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு வலுவாக இருக்கிறது
x
தினத்தந்தி 21 Dec 2017 9:00 PM GMT (Updated: 21 Dec 2017 8:03 PM GMT)

தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு வலுவாக இருப்பதாகவும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்றும் தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கூறினார்.

புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு வலுவாக இருப்பதாகவும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்றும் தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கூறினார்.

சுமித் பேட்டி

இலங்கை தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி உடனடியாக தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படுகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 5–ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

இந்த தொடர் குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

தென்ஆப்பிரிக்க அணி மிக வலுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். டிவில்லியர்சின் வருகையின் மூலம் பேட்டிங் இன்னும் பலமடைந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சும் உண்மையிலேயே வலிமை மிக்கதாக காணப்படுகிறது. மிரட்டலாக பந்து வீசக்கூடிய அனுபவம் வாய்ந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன்(ஸ்டெயின், பிலாண்டர், மோர்னே மோர்கல், ரபடா) இரண்டு இளம் வேகப்புயல்களும் உள்ளனர்.

எங்களது அணி 3 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கும் என்று கருதுகிறேன். 6 பேட்ஸ்மேன்களுடன் 7–வது வரிசையை விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் நிரப்புவார். ஆக, தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங்கும் வலுமிக்கதாக உள்ளது.

கேப்டவுன், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு மைதானமாகும். தென்ஆப்பிரிக்க மண்ணில், வேகப்பந்து நகரும் தன்மை அதிகம் இல்லாத மைதானம் இது தான். போக போக, சுழற்பந்து வீச்சும் கொஞ்சம் எடுபடும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் 2–வது மற்றும் 3–வது டெஸ்ட் நடக்கும் ஆடுகளங்கள் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

பவுலர்களுக்கு பொறுப்பு

இங்கு ரன்கள் குவிப்பது, தான் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உள்ள சவாலான வி‌ஷயமாகும். அவர்கள் மிகப்பெரிய ரன்கள் குவித்தார்கள் என்றால், அதன் பிறகு தென்ஆப்பிரிக்காவை நெருக்கடிக்குள்ளாக்க முடியும். இந்திய அணியில் புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் தான் முக்கிய பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். கடந்த முறை அவர்கள் இருவரும் நன்கு செயல்பட்டனர். இதே போல் இந்திய அணி வெற்றிகரமாக ஜொலிக்க வேண்டும் என்றால், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் அபாரமாக பந்து வீச வேண்டியது அவசியமாகும்.

இந்திய மண்ணில் அவர்கள் கொஞ்சம் நேரம் பவுலிங் செய்து தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதன் பிறகு இடைவெளிவிட்டு மறுபடியும் பந்து வீச வருவார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சு கணிசமாக எடுபடும் தென்ஆப்பிரிக்க மண்ணில் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ச்சியாக நிறைய ஓவர்கள் வீச வேண்டி இருக்கும். மேலும் இந்திய அணியின் வெற்றி வேகப்பந்து வீச்சாளர்களின் கையில் தான் இருக்கிறது. அதனால் சொந்த மண்ணில் விளையாடுவதை காட்டிலும் இங்கு அவர்களின் மனநிலை வித்தியாசமாக இருக்கும்.

கோலிக்கு சவால்

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி, துணை கண்டத்தில் நிறைய தொடர்களில் வாகை சூடியிருக்கிறது. அவர்கள் இந்த தலைமுறையிலும் ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ வேண்டும் என்று விரும்பினால், தென்ஆப்பிரிக்காவிலும் அசத்த வேண்டும். இது தான் விராட் கோலிக்கு உள்ள மிகப்பெரிய சோதனையாகும்.

மொத்தத்தில் இது பரபரப்பு நிறைந்த ஒரு தொடராக அமையும். இரு அணியிலும் துடிப்பு மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். உலக கிரிக்கெட் அரங்கில், உணர்ச்சிகரமான டெஸ்ட் தொடர்கள் அவசியமாகும். அப்படிப்பட்ட ஒரு தொடர் தான் இது.

இவ்வாறு கிரேமி சுமித் கூறினார்.


Next Story