இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 2–வது ஆட்டம் இன்று நடக்கிறது


இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 2–வது ஆட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 21 Dec 2017 9:30 PM GMT (Updated: 21 Dec 2017 8:29 PM GMT)

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று 2–வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

இந்தூர்,

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று 2–வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்களில் சுருட்டியதுடன் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுலின் அரைசதமும் (61 ரன்), டோனி (39 ரன்), மனிஷ் பாண்டே (32 ரன்) ஆகியோரின் அதிரடியும் இந்தியா 180 ரன்களை எட்டுவதற்கு வழிவகுத்தது.

இதன் பிறகு யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் தொடுத்த சுழல் தாக்குதலில் இலங்கை அணி திக்கற்று போனது. 4 விக்கெட்டுகளை சாய்த்த சாஹல் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை நீடித்து தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

தாக்குப்பிடிக்குமா இலங்கை?

திசரா பெரேரா தலைமையிலான இலங்கை அணி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு நிகராக மல்லுகட்டுவார்களா? என்பது சந்தேகம் தான். மூத்த வீரர்கள் உபுல் தரங்கா, மேத்யூஸ், திசரா பெரேரா ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோபிக்க தவறினால் அதன் பிறகு இலங்கை அணியின் நிலைமை மோசமாகி விடுகிறது.

பிற்பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் எதிரணியால் பந்து வீசுவது கடினம் என்று நினைத்து தான் முதலாவது ஆட்டத்தில் டாஸ் ஜெயித்து திசரா பெரேரா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. இந்த ஆட்டத்தில் வியூகங்களை மாற்றி களம் இறங்க திட்டமிட்டுள்ள இலங்கை அணி கரைசேருமா அல்லது மூழ்கி போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். கடைசியாக கடந்த செப்டம்பரில் இங்கு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 294 ரன்கள் இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்தது. எல்லைக்கோடு தூரம் குறைவு என்பதால் இங்கு சரமாரியாக பவுண்டரிகளை நொறுக்க முடியும்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட் அல்லது பாசில் தம்பி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: டிக்வெல்லா, தரங்கா, குசல் பெரேரா, சமரவிக்ரமா, மேத்யூஸ், குணரத்னே, ‌ஷனகா, திசரா பெரேரா (கேப்டன்), அகிலா தனஞ்ஜெயா, சமீரா, நுவான் பிரதீப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

--–

டோனிக்கு, லோகேஷ் ராகுல் ஆதரவு

--–

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது:–

டோனியின் பார்ம் குறித்து ஏன் அடிக்கடி விவாதிக்கிறார்கள் என்பது புரியவில்லை. டி.வி.யில் அவரது ஆட்டத்தை பார்க்கும் போதோ அல்லது அவருடன் இணைந்து ஆடும் போதோ எப்போதும் அவர் ரன் எடுக்கக்கூடியவராக தெரிகிறார். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய வீரர்களில் ஒருவராக டோனி விளங்குகிறார். வீரர்களின் ஓய்வறையில் அவரை பார்க்கும் போது எனக்குள் உத்வேகம் ஏற்படுவது உண்டு. இன்னும் அவர் நல்ல நிலையில் உள்ளார். முதலாவது 20 ஓவர் போட்டியில் அவர் நேர் எதிரே அடித்த ஒரு வலுவான ஷாட் கிட்டத்தட்ட என்னை கொல்வது போல் சீறிப்பாய்ந்தது. நல்லவேளையாக துள்ளி குதித்து தப்பினேன்.

அது மட்டுமின்றி கடந்த முறை கட்டாக்கில் நடந்த ஒரு நாள் போட்டியில் டோனி சதம் விளாசினார். உண்மையிலேயே ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

இவ்வாறு லோகேஷ் ராகுல் கூறினார்.


Next Story