இலங்கை அணிக்கு எதிரான தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையில் இந்தியா 20 ஓவர் போட்டியில் இன்று மோதல்


இலங்கை அணிக்கு எதிரான தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையில் இந்தியா  20 ஓவர் போட்டியில் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Dec 2017 9:00 PM GMT (Updated: 23 Dec 2017 8:25 PM GMT)

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்றிரவு நடக்கிறது.

மும்பை,

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்றிரவு நடக்கிறது.

கடைசி ஆட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. டெஸ்ட் தொடரை 1–0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கிலும் பறிகொடுத்த இலங்கை அணி இப்போது 20 ஓவர் தொடரிலும் முதல் இரு ஆட்டங்களில் மண்ணை கவ்விவிட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கட்டாக்கில் 93 ரன்கள் வித்தியாசத்திலும், இந்தூரில் 88 ரன்கள் வித்தியாசத்திலும் மெகா வெற்றிகளை பெற்ற இந்திய அணி தொடரை வசப்படுத்திவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. வாஷிங்டன் சுந்தர், தீப் ஹூடா, பாசில் தம்பி ஆகியோரில் இருவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குல்தீப்–சாஹல்

கடந்த ஆட்டத்தில் இந்திய அணி 260 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் ரோகித் சர்மாவின் விசுவரூப சதமும், லோகேஷ் ராகுலின் அரைசதமும் வெற்றிக்கு வழிவகுத்தன. இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக இருக்கிறது. இதே போல் மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் அட்டகாசப்படுத்துகிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் தான் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். வெற்றிப்பயணத்தை நீட்டித்து தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

இந்தூரில் நடந்த 2–வது ஆட்டத்தில் இலங்கை அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு அடுத்த 27 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. இது தான் இலங்கையின் பலவீனமாகும். தற்போது மேலும் ஒரு பின்னடைவாக தசைப்பிடிப்பால் அவதிப்படும் ஆல்–ரவுண்டர் மேத்யூஸ் அடுத்த இரு வாரங்கள் எந்த போட்டியிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடிமேல் அடி வாங்கி வரும் இலங்கை அணி இந்த சுற்றுப்பயணத்தை ஆறுதல் வெற்றியோடு நிறைவு செய்ய முயற்சிக்கும். ஆனால் இந்தியாவின் வீறுநடையை பார்க்கும் போது, இலங்கையின் ஆசை நிறைவேறுவது கடினமே. இந்த ஆடுகளமும் பேட்டிங்குக்கு சாதகமான தான். இதனால் இங்கும் ரசிகர்கள் ரன்விருந்தை தரிசிக்கலாம்.

அணி விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஜெய்தேவ் உனட்கட் அல்லது பாசில் தம்பி.

இலங்கை: உபுல் தரங்கா, டிக்வெல்லா, குசல் பெரேரா, சமரவிக்ரமா, திசரா பெரேரா (கேப்டன்), குணரத்னே, ‌ஷனகா அல்லது விஷ்வா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா, சதுரங்கா டி சில்வா அல்லது பதிரானா, சமீரா, நுவான் பிரதீப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story