சாதனைக்காக விளையாடுவதில்லை: ‘‘கேப்டன் பதவி மீண்டும் கிடைக்குமா என்பது எனக்கு தெரியாது’’ ரோகித் சர்மா பேட்டி


சாதனைக்காக விளையாடுவதில்லை: ‘‘கேப்டன் பதவி மீண்டும் கிடைக்குமா என்பது எனக்கு தெரியாது’’ ரோகித் சர்மா பேட்டி
x
தினத்தந்தி 23 Dec 2017 10:00 PM GMT (Updated: 23 Dec 2017 8:29 PM GMT)

இந்திய அணியின் கேப்டன் பதவி மீண்டும் கிடைக்குமா என்பது தனக்கு தெரியாது என்று ரோகித் சர்மா கூறினார்.

இந்தூர்,

இந்திய அணியின் கேப்டன் பதவி மீண்டும் கிடைக்குமா என்பது தனக்கு தெரியாது என்று ரோகித் சர்மா கூறினார்.

சாதனை மன்னன் பேட்டி

இந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசி, உலக சாதனையை சமன் செய்தார். அவர் 118 ரன்கள் (43 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) திரட்டிய நிலையில் கேட்ச் ஆனார்.

டிவில்லியர்சின் சாதனையை முறியடித்து, மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து ஓர் ஆண்டில் அதிக சிக்சர்கள் நொறுக்கிய வீரர் (64 சிக்சர்) என்ற சிறப்புக்கும் 30 வயதான ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கேப்டனாக முதல் முறையாக களம் கண்ட போது, நெருக்கடி இருந்தது. இதே நெருக்கடி மும்பையில் நடக்கும் கடைசி 20 ஓவர் போட்டியிலும் இருக்கும். இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு (கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் தற்போது கேப்டனாக இருக்கிறார்) மறுபடியும் கிடைக்குமா? என்பது தெரியாது. எனவே களத்தில் கேப்டனாக நிற்கும் ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகவும் முக்கியமானதாகும்.

நாலாபகுதியிலும் ரன்வேட்டை

பந்தை மிக வலுவாக அடிக்கக்கூடிய அளவுக்கு என்னிடம் பெரிய அளவில் சக்தி கிடையாது. கணித்து, மிகச்சரியான நேரத்தில் பந்தை எதிர்கொண்டு ரன்களை சேர்ப்பதே எனது பலமாகும். எந்த மாதிரி பீல்டிங் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து, அதற்கு ஏற்ப ஷாட்டுகளை அடிப்பேன். 6 ஓவர்களுக்கு பிறகு பீல்டர்கள் விரிவுபடுத்தப்படுவார்கள். அப்போது எந்த இடைவெளியில் பந்தை என்னால் பவுண்டரிக்கு விரட்ட முடியும் என்பதை நோட்டமிட்டு, அதற்கான முயற்சியில் இறங்குவேன்.

குறிப்பிட்ட ஒரு பகுதி என்று இல்லாமல் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டியடிக்க விரும்புகிறேன். ஒரு பகுதியில் மட்டுமே தொடர்ச்சியாக ரன்களை எடுத்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் எதிரணியினர் கணித்து விடுவார்கள். அதனால் மைதானத்தின் எல்லா பக்கமும் ரன்கள் எடுப்பது அவசியமாகும். அது தான் எனது பிரதான பலமாகும்.

சாதனைக்காக ஆடுவதில்லை

இந்தூர் போட்டியில் ரன்களை குவிப்பது பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேனே தவிர, குறிப்பிட்ட இலக்கை (இரட்டை சதம்) மனதில் வைத்து ஆடவில்லை. மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி) நான் சாதனைகளை எதிர்நோக்கி விளையாடுவதில்லை. களம் இறங்கி, முடிந்த வரை நிறைய ரன்கள் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே பணியாகும்.

இன்று சதம் அடிக்க வேண்டும் அல்லது இரட்டை செஞ்சுரி பதிவு செய்ய வேண்டும் என்ற நினைப்போடு ஒரு போதும் களம் இறங்கியதில்லை. எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். அதுவே எனது ஆசையாகும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


Next Story