வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 23 Dec 2017 10:00 PM GMT (Updated: 23 Dec 2017 8:46 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

கிறைஸ்ட்சர்ச்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஒரு நாள் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு காலின் முன்ரோ (30 ரன்), ஜார்ஜ் ஒர்க்கர் (58 ரன்) ஜோடி நல்ல தொடக்கம் தந்தது. ஆனால் மிடில் வரிசையில் நீல் புரூம் (6 ரன்), பொறுப்பு கேப்டன் டாம் லாதம் (20 ரன்), ராஸ் டெய்லர் (57 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேற நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 186 ரன்களுடன் (33 ஓவர்) லேசான தடுமாற்றத்தை கண்டது.

இதன் பிறகு ஹென்றி நிகோல்சும், டாட் ஆஸ்டிலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், ஸ்கோரை 300 ரன்களையும் கடக்க வைத்தனர். ஆஸ்டில் 49 ரன்களில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. நிகோல்ஸ் 83 ரன்களுடன் (62 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

மிரட்டிய பவுல்ட்

அடுத்து கடின இலக்கை நோக்கி களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலைகுலைந்தது. அதிகபட்சமாக ஆஷ்லே நர்ஸ் 27 ரன்கள் எடுத்தார். வெறும் 28 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. வெஸ்ட் இண்டீசை 200 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும்.

நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் 28 வயதான டிரென்ட் பவுல்ட் 10 ஓவர்களில் 3 மெய்டனுடன் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் மிச்சமுள்ள 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடரை கைப்பற்றியது

டிரென்ட் பவுல்ட் ஒரு நாள் போட்டியில் இதுவரை 101 விக்கெட்டுகள் (56 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் 100 விக்கெட்டுகளை அதிவேகமாக கடந்த 5–வது வீரர், 2–வது நியூசிலாந்து நாட்டவர் என்ற சிறப்பை பவுல்ட் பெற்றுள்ளார்.

வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story