இந்தியாவின் பேட்டிங் வரிசை, ஸ்டெயினுக்கு சவாலாக இருக்கும் ஹர்பஜன்சிங் கணிப்பு


இந்தியாவின் பேட்டிங் வரிசை, ஸ்டெயினுக்கு சவாலாக இருக்கும் ஹர்பஜன்சிங் கணிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2017 10:45 PM GMT (Updated: 25 Dec 2017 7:40 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முயற்சியாக 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

போர்ட்எலிசபெத்,

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முயற்சியாக 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை தொடரை காரணம் காட்டி தென்ஆப்பிரிக்க மண்ணில் ‘பாக்சிங் டே’ அன்று (அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள்) டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்தது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக ஜிம்பாப்வே அணிக்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. அதை ஜிம்பாப்வேயும் ஏற்றுக் கொண்டது.

இதன்படி தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட உள்ளது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) அங்கீகாரம் அளித்திருப்பதுடன், 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை 4 நாள் டெஸ்ட் போட்டியை சோதனை முயற்சியாக தொடருவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

1877-ம் ஆண்டு முதல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தொடக்கத்தில் குறிப்பிட்ட நாட்கள் என்று நிர்ணயிக்காமல் முடிவு கிடைக்கும் வரை ஆடினர். பிறகு 5 நாட்கள் போட்டியாக மாற்றப்பட்டது. இடையில், உலக லெவன்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி (2005-ம் ஆண்டு) ஒன்று 6 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டது. ஆனால் அதில் 4 நாட்களிலேயே முடிவு கிடைத்து விட்டது.

இந்த நிலையில் அதிகாரபூர்வ 4 நாட்கள் டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்காக புதிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக டெஸ்ட் போட்டியில் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் விளையாடுவார்கள். அந்த நேரம் 6½ மணியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல நாள்தோறும் குறைந்தது 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்பது 98 ஓவர்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ‘பாலோ-ஆன்’ ஸ்கோர் வித்தியாசம் 200 ரன்களுக்கு பதிலாக 150 ரன்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. போட்டி பரபரப்பாக நகர வேண்டும், கூடுமானவரை முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட் பகல்-இரவாக நடத்தப்படுவது இது 8-வது முறையாகும். தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் நிகழ்வாகும்.

பொதுவாக போர்ட் எலிசபெத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். ஆனால் மின்னொளியின் கீழ் இளஞ்சிவப்பு நிற பந்தை எதிர்கொள்ளும் போது, ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்கும் என்பதை கணிப்பது கடினமே.

முதுகுவலி பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பயிற்சியில் ஈடுபட்டாலும் இன்னும் அவர் முழு உடல்தகுதியை எட்டவில்லை. இந்த டெஸ்டில் பங்கேற்கும் வாய்ப்பு 60 சதவீதம் மட்டுமே உள்ளதாக பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். ஒருவேளை அவர் உடல்தகுதி பெற முடியாமல் போனால் டீன் எல்கர் அணியை வழிநடத்துவார்.

ஓராண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு மோர்னே மோர்கல் போட்டியாக நிற்கிறார். இதுவரை 417 விக்கெட்டுகளை சாய்த்துள்ள ஸ்டெயின், இன்னும் 5 விக்கெட் எடுத்தால் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க பவுலர் என்ற பெருமையை பெறுவார்.

கிரேமி கிரிமர் தலைமையில் களம் காணும் ஜிம்பாப்வே அணியில் ஹாமில்டன் மசகட்சா, பிரன்டன் டெய்லர், சிகந்தர் ராசா போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனாலும் உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்குகிறது.

Next Story