ஆ‌ஷஸ் 4–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்


ஆ‌ஷஸ் 4–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்
x
தினத்தந்தி 26 Dec 2017 9:30 PM GMT (Updated: 26 Dec 2017 7:18 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் 4–வது டெஸ்டில் வார்னரின் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.

மெல்போர்ன்,

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் மூன்று டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி துணை கேப்டன் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்டும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வார்னர் அதிரடியாக விளையாட, பான்கிராப்ட் நிதானத்தை கடைபிடித்தார். வலுவான தொடக்கம் அமைத்து தந்த இந்த ஜோடி மதிய உணவு இடைவேளைக்குள் 102 ரன்கள் திரட்டியது.

அணியின் ஸ்கோர் 122 ரன்களாக உயர்ந்த போது பான்கிராப்ட் 26 ரன்களில் (95 பந்து) கிறிஸ்வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உஸ்மான் கவாஜா ஆட வந்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய வார்னர் 99 ரன்களில் இருந்த போது, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். பேட்டின் விளிம்பில் பட்டு எழும்பிய பந்து ‘மிட்ஆன்’ திசையில் நின்ற ஸ்டூவர்ட் பிராட்டின் கையில் விழுந்தது.

இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியில் திளைக்க, வார்னர் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில் நடுவர், வார்னரை நிற்கும்படி சொல்லிவிட்டு, ரீப்ளேயை பரிசோதித்தார். இதில் டாம் குர்ரன், கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ–பாலாக வீசியது தெரிய வந்தது. இதனால் வார்னருக்கு மறுவாழ்வு கிடைத்தது. தொடர்ந்து பேட் செய்த வார்னர் தனது 21–வது சதத்தை நிறைவு செய்து, குழுமியிருந்த 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

ஆனால் செஞ்சுரியை கடந்த பிறகு வார்னர் நிலைக்கவில்லை. அவர் 103 ரன்களில் (151 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜாவும் (17 ரன்) வெளியேறினார்.

உணவு இடைவேளையில் இருந்து தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மந்தமாகவே இருந்தது. இந்த பகுதியில் 26 ஓவர்களில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதன் பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், ஷான் மார்சும் கைகோர்த்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டீவன் சுமித் 65 ரன்களுடனும் (131 பந்து, 6 பவுண்டரி), ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் (93 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story