ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி பதிலடி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி பதிலடி
x
தினத்தந்தி 27 Dec 2017 10:30 PM GMT (Updated: 27 Dec 2017 8:41 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் 4–வது டெஸ்டில் அலஸ்டயர் குக்கின் அபார சதத்தின் மூலம் இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்துள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் (103 ரன்) சதம் அடித்தார். கேப்டன் ஸ்டீவன் சுமித் 65 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது 400 ரன்களை எளிதில் தாண்டுவார்கள் என்றே நினைக்கத் தோன்றியது.

ஆனால் 2–வது நாளான நேற்று ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறியது. தொடர்ந்து ஆடிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 76 ரன்களில், புதுமுக பவுலர் டாம் குர்ரனின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். ‘பாக்சிங் டே’ டெஸ்டில் சுமித் விக்கெட்டை பறிகொடுப்பது 2014–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 9 ரன்னிலும், ஷான் மார்ஷ் 61 ரன்னிலும், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 24 ரன்னிலும் வெளியேறினர். உணவு இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 119 ஓவர்களில் 327 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அந்த அணி கடைசி 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சை முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக்கும், மார்க் ஸ்டோன்மானும் தொடங்கினர். மோசமான பார்ம் காரணமாக விமர்சனத்திற்குள்ளான அலஸ்டயர் குக், கவனமுடன் விளையாடி ரன்களை சேகரித்தார். ஸ்டோன்மான் 15 ரன்னில் நாதன் லயனின் பந்து வீச்சில் அவரிடமே சிக்கினார்.

2–வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் வின்ஸ் ஆட வந்தார். இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்கோர் 80 ரன்களாக உயர்ந்த போது வின்ஸ் 17 ரன்களில், ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி நடையை கட்டினார். ஆனால் ‘ரீப்ளே’யில் பந்து பேட்டில் உரசிக்கொண்டு அதன் பிறகே காலுறையில் படுவது தெரிந்தது. டி.ஆர்.எஸ். முறைப்படி ஜேம்ஸ் வின்ஸ் ‘அப்பீல்’ செய்திருந்தால் தப்பியிருப்பார். ஏனோ, பேட்டில் பந்து உரசியதை அவரால் தெளிவாக உணர முடியவில்லை போலும்.

இதைத் தொடர்ந்து அலஸ்டயர் குக்குடன், கேப்டன் ஜோ ரூட் கைகோர்த்தார். இருவரும் திறம்பட சமாளித்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். அலஸ்டயர் குக் 66 ரன்களில் இருந்த போது, மிட்செல் மார்ஷின் பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘ஸ்லிப்’பில் நின்ற ஸ்டீவன் சுமித் கோட்டை விட்டார். ‘ஸ்லிப்’பில் பேட்ஸ்மேனுக்கு மிக நெருக்கமாக ஸ்டீவன் சுமித் நின்று கொண்டிருந்ததால் கேட்ச் செய்ய இயலாமல் போய் விட்டது.

இதன் பிறகு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலஸ்டயர் குக், கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து தனது 32–வது சதத்தை நிறைவு செய்தார். கடந்த 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட எடுக்காத 33 வயதான அலஸ்டயர் குக் ஒரு வழியாக அந்த ஏக்கத்தை தணித்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குக்கின் 5–வது சதம் இதுவாகும். 5 சதங்களையும் அவர் ஆஸ்திரேலிய மண்ணிலேயே பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்க வி‌ஷயமாகும்.

2–வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 57 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்து நல்ல நிலையில் இருக்கிறது. அலஸ்டயர் குக் 104 ரன்களுடனும் (166 பந்து, 15 பவுண்டரி), ஜோ ரூட் 49 ரன்களுடனும் (105 பந்து, 6 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி இன்னும் 135 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story