வெளிநாட்டு மண்ணில் ‘‘சவாலை ஏற்றுக் கொண்டு சாதிக்க பழக வேண்டும்’’ விராட் கோலி பேட்டி


வெளிநாட்டு மண்ணில் ‘‘சவாலை ஏற்றுக் கொண்டு சாதிக்க பழக வேண்டும்’’ விராட் கோலி பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2017 10:45 PM GMT (Updated: 27 Dec 2017 8:44 PM GMT)

வெளிநாட்டின் சீதோஷ்ண நிலை கடினமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு சாதிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்று தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 5–ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு நேற்று புறப்பட்டனர். முன்னதாக விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:–

ஒரு அணியாக தென்ஆப்பிரிக்க மண்ணில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்திய அணியின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் நாங்கள் விளையாடவில்லை. இலங்கைக்கு சென்று ஆடியது வெளிநாட்டு தொடர் என்றாலும், அங்குள்ள சீதோஷ்ண நிலை இந்தியாவில் உள்ளது போன்றே இருந்தது.

இப்போது தான் முற்றிலும் மாறுபட்ட சூழலுக்கு செல்கிறோம். அதை புரிந்து கொண்டு அணியை முன்னெடுத்து செல்லும் ஆர்வத்தில் உள்ளோம். வெளிநாட்டு பயணம் என்றாலே மனரீதியான நெருக்கடி தான் என்ற நிலையை மாற்றிக்காட்ட விரும்புகிறோம். அதே சமயம் எங்களது திறமையை யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியது கட்டாயம் இல்லை. தேசத்திற்காக 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது கடமையாகும்.

தென்ஆப்பிரிக்காவில் உள்ள சீதோஷ்ண நிலை (வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நிலை) கடினமாக இருக்கும் என்பது குறித்து பேசுகிறீர்கள். ஒரு பேட்ஸ்மேன் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்தே அவரது ஆட்டமும் இருக்கும். சரியான மனநிலையில் இல்லாவிட்டால் இந்தியாவில் ஆடுவது கூட கடினம் தான்.

கிரிக்கெட் பந்துக்கும், பேட்டுக்கும் இடையிலான ஒரு விளையாட்டு. மனரீதியாக வலுவாக இருந்தால், எந்த சூழலில் விளையாடுகிறோம் என்பது பொருட்டே அல்ல. சவாலை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு சீதோஷ்ண நிலையையும் தங்களது சொந்த நாடு போன்று பாவித்து செயல்பட வேண்டும். இந்த மாதிரி பழகி விட்டால் அதன்பிறகு எதிரணியை எதிர்கொள்வது சுலபமாகிவிடும். சவாலான சூழலில் சாதிக்கும் போது அது மிகுந்த மனநிறைவை தரும்.

பயிற்சியை சிறப்பாக செய்து, வியூகங்களை களத்தில் சரியாக அமல்படுத்தினால் போதும். மற்றபடி எந்த நாட்டில் விளையாடுவோம் என்பது பிரச்சினையே கிடையாது.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.


Next Story