ரஞ்சி கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லப்போவது யார்?


ரஞ்சி கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லப்போவது யார்?
x
தினத்தந்தி 28 Dec 2017 11:15 PM GMT (Updated: 28 Dec 2017 7:18 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டெல்லி-விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இன்று தொடங்குகிறது.

இந்தூர்,

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பாவும், டெல்லியும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் (5 நாள் போட்டி) இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

அனைவரையும் வியக்கும் வண்ணம் எழுச்சி பெற்ற மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விதர்பா அணி இந்த சீசனில் எந்த ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்கவில்லை. இதில் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் கர்நாடகாவை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும். கர்நாடகாவுக்கு எதிராக விதர்பா வேகப்பந்து வீச்சாளர் ராஜ்னீஸ் குர்பானி 12 விக்கெட்டுகளை சாய்த்து அட்டகாசப்படுத்தினார். ரஞ்சி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியிருக்கும் விதர்பா அணி இதற்காக 266 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. எனவே சாம்பியன் கனவை நனவாக்க பைஸ் பாஸல் தலைமையிலான விதர்பா அணியினர் எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பாஸல் (5 சதம் உள்பட 843 ரன்), சஞ்சய் ராமசாமி (735 ரன்), கணேஷ் சதீஷ் (626 ரன்) அனுபவ வீரர் வாசிம் ஜாபர் (500 ரன்) அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களாக திகழ்கிறார்கள். உமேஷ் யாதவ் தேசிய அணிக்கு திரும்பியிருப்பதால் பந்து வீச்சில் குர்பானியை தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. கேப்டன் பாஸல் கூறுகையில், ‘எங்களை குறைவாக மதிப்பிட்டால் அது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும்’ என்றார்.

டெல்லி அணியும் இந்த ஆண்டில் எந்த தோல்விக்கும் இடம் கொடுக்கவில்லை. கேப்டன் இஷாந்த் ஷர்மா இந்திய அணியுடன் இணைந்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விட்டதால் அணியை இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் வழிநடத்துவார். பேட்டிங்கில் மூத்த வீரர் கவுதம் கம்பீர் (3 சதம் உள்பட 632 ரன்), நிதிஷ் ராணா (528 ரன்) நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் விகாஸ் மிஷ்ரா (32 விக்கெட்), நவ்தீப் சைனி (29 விக்கெட்) கைகொடுக்கிறார்கள். 7 முறை சாம்பியனான டெல்லி அணி கடைசியாக 2007-08-ம் ஆண்டு கோப்பையை வென்று இருந்தது. மறுபடியும் அரியணையில் ஏற துடிக்கும் டெல்லிக்கு விதர்பா முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story