ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: டெல்லி அணி 295 ரன்னில் ஆல்-அவுட்


ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: டெல்லி அணி 295 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 30 Dec 2017 11:15 PM GMT (Updated: 30 Dec 2017 7:24 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெல்லி அணி 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. குர்பானி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

இந்தூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி - விதர்பா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஷோரி 123 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி எளிதில் 300 ரன்களை கடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விதர்பா வேகப்பந்து வீச்சாளர் ராஜ்னீஷ் குர்பானி, ‘ஸ்விங்’ தாக்குதல் மூலம் டெல்லி பேட்ஸ்மேன்களை அலற வைத்தார்.

ஆட்டத்தின் 101-வது ஓவரின் 5-வது மற்றும் 6-வது பந்துகளில் விகாஸ் மிஸ்ரா (13 ரன்), நவ்தீப் சைனி (0) ஆகியோரை கிளன் போல்டு ஆக்கிய குர்பானி, தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் துருவ் ஷோரியையும் (145 ரன்) காலி செய்தார். தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை சாய்த்த அவர் ‘ஹாட்ரிக்’ சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். முதல்தர கிரிக்கெட்டில் அவருக்கு இது முதல் ‘ஹாட்ரிக்’ ஆகும்.

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஒரு வீரர் ஹாட்ரிக் சாதனை படைப்பது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1972-73-ம் ஆண்டு மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் கல்யாணசுந்தரம் இத்தகைய சாதனையை படைத்திருந்தார்.

தொடர்ந்து பந்து வீசிய குர்பானி அதே ஓவரின் 5-வது பந்தில் கெஜ்ரோலியாவையும் (0) போல்டு ஆக்கினார். 5 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி முதல் இன்னிங்சில் 102.5 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 24 வயதான குர்பானி 24.4 ஓவர்களில் 8 மெய்டனுடன் 59 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் விதர்பா அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பைஸ் பாஸல், சஞ்சய் ராமசாமி ஜோடி 96 ரன்கள் சேர்த்து வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தது. சஞ்சய் 31 ரன்களிலும், பாஸல் 67 ரன்களிலும் (101 பந்து, 10 பவுண்டரி) ஆகாஷ் சூதானின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கணேஷ் சதீஷ் 12 ரன்னிலும், அபூர்வ் வான்காடே 28 ரன்னிலும் வெளியேறினர்.

2-வது நாள் ஆட்ட நேர இறுதியில் விதர்பா அணி 67 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. 39 வயதான வாசிம் ஜாபர் 61 ரன்களுடன் (120 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருக்கிறார். இன்னும் 89 ரன்கள் பின்தங்கியுள்ள விதர்பா அணி இன்று 3-வது நாளில் தொடர்ந்து விளையாடும்.

Next Story