ஸ்டீவன் சுமித்தின் அபார சதத்தால் ‘டிரா’ செய்தது ஆஸ்திரேலியா


ஸ்டீவன் சுமித்தின் அபார சதத்தால் ‘டிரா’ செய்தது ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 30 Dec 2017 11:30 PM GMT (Updated: 30 Dec 2017 7:30 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவன் சுமித்தின் அபார சதத்தால் ‘டிரா’ கண்டது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் ‘பாக்சிங் டே’ என்று சிறப்புடன் தொடங்கிய இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 327 ரன்களும், இங்கிலாந்து 491 ரன்களும் எடுத்தன.

164 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 43.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 25 ரன்னுடனும், துணை கேப்டன் டேவிட் வார்னர் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நான்காம் நாளில் மழை காரணமாக 46 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘டிரா’ செய்யும் முனைப்புடன் வார்னரும், சுமித்தும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். வார்னர் 161 பந்துகளில் 50 ரன்களை தொட்டார். அவரது வாழ்க்கையில் மந்தமான அரைசதம் இது தான். அணியின் ஸ்கோர் 172 ரன்களாக உயர்ந்த போது, வார்னர் 86 ரன்களில் (227 பந்து, 8 பவுண்டரி) ஜோ ரூட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷான் மார்ஷ் 4 ரன்னில், ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இடையில் மழையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் 5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் சுமித்துடன், மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானத்தை கடைபிடித்தனர். ஆமை வேகத்தில் ஆடிய இந்த கூட்டணியை உடைக்க இங்கிலாந்து 7 பவுலர்களை பயன்படுத்தியும் பலன் இல்லை. நேர்த்தியாக ஆடிய ஸ்டீவன் சுமித் தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார். நடப்பு தொடரில் அவரது 3-வது சதமாகும்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 124.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 263 ரன்கள் (ரன்ரேட் 2.11) எடுத்திருந்த போது இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். ஸ்டீவன் சுமித் 102 ரன்களுடனும் (275 பந்து, 6 பவுண்டரி), மிட்செல் மார்ஷ் 29 ரன்களுடனும் (166 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். 244 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் அலஸ்டயர் குக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஷஸ் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்ட ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. இது சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் என்பதால் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 616 பேர் நேரில் கண்டு ரசித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், 4-வது நாள் பிற்பகலில் மழை பெய்த பிறகு ஆடுகளத்தன்மை மிகவும் மெதுவாக (ஸ்லோ) காணப்பட்டது. ‘டிரா’வை நோக்கி விளையாடுவதே சரியானது என்று நினைத்தோம். ஆடுகளம் பேட் செய்வதற்கு ஏதுவாக இருந்தாலும், ரன் எடுப்பதற்கு சிரமமாகவே இருந்தது. அடுத்த டெஸ்ட் நடக்கும் சிட்னி அருமையான ஒரு இடம். அது எனது சொந்த ஊர் மைதானம் என்பதால் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியது எனது பிறந்த நாள் பரிசாக (ரூட்டுக்கு நேற்று 27-வது பிறந்த நாள்) கருதுகிறேன். உணவு இடைவேளையின் போது எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதனால் எல்லா வகையிலும் முழு சக்தியை வெளிப்படுத்தினோம். ஆனால் ஆடுகளம் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. எல்லா சிறப்பும் ஸ்டீவன் சுமித் மற்றும் அவரது சகாக்களையே சாரும். உண்மையிலேயே சூப்பராக விளையாடினர். இது போன்ற ஆடுகளத்தில் சுமித்தின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் கஷ்டம். அடுத்த டெஸ்டில் அவருக்கு எதிராக வேறு வியூகங்களை வகுப்போம். இந்த டெஸ்டில் 5 நாட்களிலும் எங்களது ‘பார்மி-ஆர்மி’ ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. உலகிலேயே எங்களிடம் தான் சிறந்த ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது’ என்றார்.

* ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் டெஸ்டில் பதிவு செய்த 23-வது சதம் இதுவாகும். அதே சமயம் கேப்டனாக அடித்த 15-வது சதமாகும். அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (25 சதம்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (19 சதம்) ஆகியோருக்கு அடுத்து ஆலன்பார்டர், ஸ்டீவ் வாக் (இருவரும் தலா 15 சதம்) ஆகியோருடன் 3-வது இடத்தை ஸ்டீவன் சுமித் பகிர்ந்து கொண்டுள்ளார்.

* ஸ்டீவன் சுமித் இந்த ஆண்டில் 6 சதங்கள் அடித்துள்ளார். 2015-ம் ஆண்டிலும் சுமித் 6 சதங்கள் அடித்திருந்தார். ஒரு ஆண்டில் 6 சதங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை அடித்த 2-வது வீரர் சுமித் ஆவார். ஏற்கனவே ரிக்கிபாண்டிங் இச்சாதனையை (3 முறை) செய்திருக்கிறார்.

* ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 13 டெஸ்டுகளுக்கு பிறகு ஆன முதல் ‘டிரா’ இது தான். மெல்போர்னில் கடந்த 20 ஆண்டுகளில் முடிவு கிடைக்காத 2-வது போட்டி இதுவாகும்.

Next Story