2017-ம் ஆண்டு கிரிக்கெட்டில் கலக்கிய வீரர்கள் யார்-யார்?


2017-ம் ஆண்டு கிரிக்கெட்டில் கலக்கிய வீரர்கள் யார்-யார்?
x
தினத்தந்தி 31 Dec 2017 12:00 AM GMT (Updated: 30 Dec 2017 7:44 PM GMT)

2017-ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்த சீசனில் சாதித்தவர்கள் யார்-யார்? என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

புதுடெல்லி,

இந்த ஆண்டில் மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறின. இதில் 40-ல் முடிவு கிட்டியது. அதிக வெற்றிகளை இந்தியா, தென்ஆப்பிரிக்கா (தலா 7 வெற்றி) அணிகள் பெற்றிருந்தன. அதாவது 11 டெஸ்டுகளில் விளையாடியுள்ள இந்திய அணி 7 வெற்றியுடன் 3-ல் டிராவும், ஒன்றில் தோல்வியும் கண்டிருந்தது.

அதிக ரன்கள் திரட்டியவர்களில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடம் வகிக்கிறார். அவர் 11 டெஸ்டில் 6 சதம், 3 அரைசதம் உள்பட 1,305 ரன்கள் (சராசரி 76.76) சேர்த்து இருக்கிறார். தனிநபர் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் அலஸ்டயர் குக் 244 ரன்களை (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) பதிவு செய்துள்ளார்.

92 சதங்கள் அடிக்கப்பட்டன. இதில் 8 இரட்டை செஞ்சுரிகளும் அடங்கும். இந்திய கேப்டன் விராட் கோலி ஒரே ஆண்டில் மூன்று இரட்டை சதம் விளாசி வியப்பூட்டினார்.

இந்த ஆண்டில் 600 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட 6 நிகழ்வுகளில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 5 ஆகும். இந்திய அணி, வங்காளதேசத்திற்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 687 ரன்கள் குவித்தது இந்த ஆண்டில் ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். ஜிம்பாப்வே அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 68 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

விக்கெட் வேட்டையில் டாப்-10 வீரர்களை எடுத்துக் கொண்டால் அதில் 6 இடத்தை சுழற்பந்து வீச்சாளர்களே ஆக்கிரமித்துள்ளனர். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 11 டெஸ்டில் 63 விக்கெட்டுகளை சாய்த்து முதலிடத்தில் உள்ளார். இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 5 முறை அவர் வீழ்த்தியதும் கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டில் நடந்துள்ள ஒரு நாள் போட்டிகளின் எண்ணிக்கை 129. இதில் அதிக வெற்றிகளை ருசித்த அணியாக இந்தியா (29 ஆட்டம் 21 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை) திகழ்கிறது. இலங்கைக்கு எதிராக இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 208 ரன்கள் விளாசியது தனிநபர் அதிகபட்சமாகும். அதிக ரன்கள் குவித்தவர்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 1,460 ரன்களுடன் (சராசரி 76.84) முதலிடத்தை பிடித்துள்ளார்.

86 சதங்கள் எடுக்கப்பட்டன. அதிக சதங்கள் அடித்தவர்களில் கோலியும், ரோகித் சர்மாவும் (தலா 6 சதம்) சமநிலையில் உள்ளனர்.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 392 ரன்கள் எடுத்ததே இந்த ஆண்டில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே 54 ரன்னில் முடங்கியது குறைந்தபட்சமாகும். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ‘நம்பர் ஒன்’ (18 ஆட்டத்தில் 45 விக்கெட்) பவுலராக முத்திரை பதித்து இருக்கிறார்.

இந்த சீசனில் 63 இருபது ஓவர் போட்டிகள் நடந்தன. 6 சதங்கள் விளாசப்பட்டன. இந்த சரவெடி ஆட்டத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததை காண முடிந்தது. 13 ஆட்டங்களில் 9-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அத்துடன் அதிகபட்ச ரன்களையும் இந்தியாவே பதிவு செய்துள்ளது. இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டில் நிறைய சிக்சர் நொறுக்கியவர்களில் இந்தியாவின் ரோகித் சர்மா (46 சிக்சர், ஒரு நாள் போட்டி), நியூசிலாந்தின் கிரான்ட்ஹோம் (15 சிக்சர், டெஸ்ட் கிரிக்கெட்), வெஸ்ட் இண்டீசின் எவின் லீவிஸ் (31 சிக்சர், இருபது ஓவர் போட்டி) ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

விக்கெட் கீப்பர்களில் ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் டோனியும் (29 ஆட்டத்தில் 39 பேரை ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார்), டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக்கும் (12 டெஸ்டில் 50 பேரை அவுட் ஆக்கியுள்ளார்) கில்லாடிகளாக திகழ்கிறார்கள்.

Next Story