கிரிக்கெட்

டெல்லிக்கு எதிரான ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி 528 ரன்கள் குவிப்பு + "||" + Ranji Final against Delhi

டெல்லிக்கு எதிரான ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி 528 ரன்கள் குவிப்பு

டெல்லிக்கு எதிரான ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி 528 ரன்கள் குவிப்பு
டெல்லிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 528 ரன்கள் குவித்துள்ளது.
இந்தூர்,

டெல்லி - விதர்பா அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் குர்பானி, ‘ஹாட்ரிக்’ உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. வாசிம் ஜாபர் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று விதர்பா வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். அக்‌ஷய் வாகாரே 17 ரன்னிலும், வாசிம் ஜாபர் 78 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அப்போது விதர்பா அணி 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நெருக்கடியான சூழலில் விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர், ஆதித்ய சர்வாத் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து நிமிர வைத்தனர். டெல்லி பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் தங்கள் அணி முன்னிலை பெற வழிவகுத்தனர். சர்வாத் தனது பங்குக்கு 79 ரன்கள் (154 பந்து, 11 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து அக்‌ஷய் வாட்கருடன், சித்தேஷ் நிரால் இணைந்தார். இந்த கூட்டணியும் டெல்லி பவுலர்களின் வியூகங்களை தகர்த்தெறிந்தது. அபாரமாக ஆடிய அக்‌ஷய் வாட்கர் தனது முதல் சதத்தை எட்டினார். ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 7 விக்கெட்டுக்கு 528 ரன்கள் திரட்டியுள்ளது. அக்‌ஷய் வாட்கர் 133 ரன்களுடனும் (243 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிரால் 56 ரன்களுடனும் (92 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் நிற்கிறார்கள்.

விதர்பா அணி இதுவரை 233 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. வலுவான நிலையை எட்டியிருப்பதால் விதர்பா அணிக்கு முதல் முறையாக ரஞ்சி மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.