ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி முதல் முறையாக விதர்பா அணி ‘சாம்பியன்’


ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி முதல் முறையாக விதர்பா அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 1 Jan 2018 11:00 PM GMT (Updated: 1 Jan 2018 8:56 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணி, டெல்லியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.

இந்தூர்

இந்தியாவின் பிரதான முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கிரிக்கெட்டில் இந்த சீசனில் 28 அணிகள் பங்கேற்றன.

லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன் டெல்லியும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விதர்பா அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இவ்விரு அணிகளில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிசுற்று கடந்த 29-ந்தேதி இந்தூரில் தொடங்கியது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 295 ரன்னில் ஆட்டம் இழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 528 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர் 133 ரன்களுடனும், சித்தேஷ் நிரால் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 547 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மேற்கொண்டு ரன் எடுக்காத அக்‌ஷய் வாட்கர் 133 ரன்களிலும், நிரால் 74 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 252 ரன்கள் பின்தங்கிய நிலையில் டெல்லி அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குணால் சண்டிலா (9 ரன்), கவுதம் கம்பீர் (36 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காவிட்டாலும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த துருவ் ஷோரியும், நிதிஷ் ராணாவும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.

ஒரு கட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது ஆட்டம் கடைசி நாளுக்கு நகரும் போலவே தோன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு திசைமாறியது. துருவ் ஷோரி 62 ரன்களிலும், நிதிஷ் ராணா 64 ரன்களிலும் வெளியேறினர்.

இதன் பின்னர் டெல்லி அணியின் விக்கெட்டுகள் வேகமாக விழுந்தன. கேப்டன் ரிஷாப் பான்ட் தனது பங்குக்கு 32 ரன்கள் எடுத்தார். முடிவில் டெல்லி அணி 76 ஓவர்களில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. விதர்பா தரப்பில் அக்‌ஷய் வகாரே 4 விக்கெட்டுகளும், ஆதித்ய சர்வாத் 3 விக்கெட்டுகளும், ராஜ்னீஸ் குர்பானி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். சில கேட்ச்சுகளை விதர்பா வீரர்கள் கோட்டை விட்டனர். பீல்டிங்கில் கச்சிதமாக செயல்பட்டிருந்தால் இதைவிட குறைந்த ஸ்கோரில் டெல்லி அணி அடங்கியிருக்கும்.

இதன் மூலம் விதர்பாவுக்கு 29 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 5 ஓவரில் கேப்டன் பைஸ் பாஸலின் (2 ரன்) விக்கெட்டை இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சாம்பியன் கோப்பையையும் தட்டிச் சென்றது. வெற்றிக்குரிய ஸ்கோரை மூத்த வீரர் வாசிம் ஜாபர் (17 ரன்) பவுண்டரி மூலம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

1934-ம் ஆண்டு முதல் இதுவரை 84 ரஞ்சி தொடர்கள் நடந்துள்ளன. இதில் விதர்பா அணி, கோப்பையை கையில் ஏந்துவது இதுவே முதல் நிகழ்வாகும். விதர்பா கேப்டன் பாஸல் கூறுகையில், ‘நீண்ட காலம் உழைத்து கடைசியில் லட்சியத்தை நிறைவு செய்துள்ளோம். இந்த சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பயிற்சியை தொடங்கி விட்டோம். அதற்கு கிடைத்த பரிசு தான் இது. முதல் இன்னிங்சில் எங்களது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சந்திரகாந்த் பன்டிட் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.

முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் சாதனை படைத்த விதர்பா வேகப்பந்து வீச்சாளர் குர்பானி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கூறுகையில், ‘ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது. ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது மிகவும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.

Next Story