கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை பந்தாடியது நியூசிலாந்து காலின் முன்ரோ 104 ரன்கள் விளாசல் + "||" + Last 20 Overs Cricket: West Indie pantatiyatu New Zealand

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை பந்தாடியது நியூசிலாந்து காலின் முன்ரோ 104 ரன்கள் விளாசல்

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை பந்தாடியது நியூசிலாந்து காலின் முன்ரோ 104 ரன்கள் விளாசல்
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி காலின் முன்ரோவின் சதத்தின் உதவியுடன் வெஸ்ட் இண்டீசை பந்தாடியது.

மவுன்ட் மவ்ன்கானு,

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி காலின் முன்ரோவின் சதத்தின் உதவியுடன் வெஸ்ட் இண்டீசை பந்தாடியது.

10 சிக்சருடன் முன்ரோ சதம்

நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மவ்ன்கானுவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் அற்புதமான தொடக்கம் உருவாக்கி தந்தனர். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் (11.3 ஓவர்) திரட்டினர். கப்தில் 63 ரன்களில் (38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். கப்தில் 100 ரன்களுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பது இது 7–வது நிகழ்வாகும். வேறு எந்த வீரரும் இத்தனை முறை 100 ரன் பார்ட்னர்ஷிப்புக்கு பங்களிப்பு அளித்தது இல்லை.

அடுத்து வந்த டாம் புருஸ் 23 ரன்களில் கிளீன் போல்டு ஆனார். மறுமுனையில் சிக்சர் மழை பொழிந்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த காலின் முன்ரோ 20 ஓவர் போட்டியில் தனது 3–வது சதத்தை நிறைவு செய்தார். அவர் 104 ரன்களில் (53 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) கேட்ச் ஆனார். மற்ற வீரர்கள் கிட்சென் 9 ரன்னிலும், கேப்டன் வில்லியம்சன் 19 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2010–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

கெய்ல் ‘டக்–அவுட்’

அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் விக்கெட் கீப்பர் சாட்விக் வால்டன் (0), கிறிஸ் கெய்ல் (0) முதல் ஓவரிலேயே டிம் சவுதியின் பந்து வீச்சுக்கு இரையானார்கள். இந்த ஊசலாட்டத்தில் இருந்து வெஸ்ட் இண்டீசால் துளி கூட நிமிர முடியவில்லை. அதிகபட்சமாக ஆந்த்ரே பிளட்சர் 46 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். 16.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்களில் சுருண்டது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டிம் சவுதி 3 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட், சோதி தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்தின் ‘மெகா’ வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2016–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 95 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியே சிறந்ததாக இருந்தது.

தொடரை வென்றது நியூசிலாந்து

வெற்றியை அடுத்து 20 ஓவர் தொடரை நியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2–வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3–0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து வசப்படுத்தி இருந்தது.

1999–2000–ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து பயணத்தில் ஒரு வெற்றி கூட வெஸ்ட் இண்டீஸ் அணி பெறாதது இதுவே முதல் முறையாகும்.

3–வது முறையாக சதம் அடித்து முன்ரோ சாதனை

*நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ ஏற்கனவே கடந்த ஆண்டு வங்காளதேசம் (101 ரன்) மற்றும் இந்தியாவுக்கு எதிரான (109 ரன்) 20 ஓவர் போட்டிகளில் சதம் அடித்திருந்தார். இப்போது உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் சதத்தை பதிவு செய்திருக்கிறார். சர்வதேச 20 ஓவர் போட்டி வரலாற்றில் மூன்று சதங்கள் விளாசிய முதல் வீரர் காலின் முன்ரோ தான். 30 வயதான முன்ரோ இதுவரை 38 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த மூன்று சதங்களையும் கடைசி 10 இன்னிங்சில் அவர் அடித்திருப்பது கவனிக்கத்தக்கது.

*பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), எவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோர் 20 ஓவர் போட்டியில் தலா 2 சதங்கள் அடித்து அடுத்த நிலையில் இருக்கிறார்கள்.

*இந்த தொடரில் காலின் முன்ரோ மொத்தம் 223 ரன்கள் (53 ரன், 66 ரன், 104 ரன்) சேர்த்து தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 20 ஓவர் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர் தான். 2016–ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகட்சா 222 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாகும்.

*47 பந்துகளில் மூன்று இலக்கு ஸ்கோரை தொட்ட காலின் முன்ரோ, அதிவேகமாக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கோரி ஆண்டர்சனுடன் (இவர், இதே மைதானத்தில் கடந்த ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 10 சிக்சர் அடித்திருந்தார்) பகிர்ந்து கொண்டார்.