இந்திய அணியை பழிதீர்க்க ஆர்வம் தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் பேட்டி


இந்திய அணியை பழிதீர்க்க ஆர்வம் தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2018 8:45 PM GMT (Updated: 4 Jan 2018 8:25 PM GMT)

தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் 33 வயதான பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் 33 வயதான பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது வரும் என்று எனக்கு தெரியாது. அனேகமாக எங்களது சீனியர் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடப்போகும் கடைசி டெஸ்ட் தொடராக இது இருக்கும். 2015–ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 0–3 என்ற கணக்கில் தோற்றோம். அந்த தோல்விக்கு பழிதீர்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம். அதனால் இந்த தொடரை நினைக்கும் போதே பரவசம் ஏற்படுகிறது.

கேப்டவுன் ஆடுகளத்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்கள் எந்த மாதிரி விரும்பினோமோ அதை போன்று இருப்பது போல் தான் தெரிகிறது. ஆடுகளத்தன்மையை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்போம்.

இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு எங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பிளிஸ்சிஸ் கூறினார்.

இரு நாட்டு தொடர்களின் போது போட்டிக்கு முந்தைய நாள் கேப்டன்கள் பேட்டி அளிப்பது வழக்கம். ஆனால் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி கொடுக்க செய்தியாளர் அறைக்கு வரவில்லை. இதனால் கேள்விக் கணைகளை தொடுக்க காத்திருந்த ஊடகத்தினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அவருக்கு பதிலாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நிருபர்களை சந்தித்தார். ‘‘முதலாவது டெஸ்டுக்கு முன்பாக 4–5 நாட்கள் கிடைத்ததால் நாங்கள் சிறந்த முறையில் தயாராகி இருக்கிறோம். எல்லா வீரர்களும் நேர்மறையான எண்ணங்களுடன் களம் காண தயாராக உள்ளனர்’ என்று பாங்கர் கூறினார்.


Next Story