ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா


ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 6 Jan 2018 8:45 PM GMT (Updated: 6 Jan 2018 8:32 PM GMT)

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

சிட்னி,

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 346 ரன்களில் ஆல்–அவுட் ஆனதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2–வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா (91 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (44 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தை இங்கிலாந்து பவுலர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கவாஜா தனது 6–வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆ‌ஷஸ் தொடரில் அவரது முதல் செஞ்சுரியாகும். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டீவன் சுமித் 83 ரன்களில் கேட்ச் ஆனார். கவாஜா 171 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

இதன் பிறகு இணைந்து மிரட்டிய மார்ஷ் சகோதரர்களும் ரன்மழை பொழிந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 479 ரன்கள் குவித்துள்ளது. ஷான் மார்ஷ் 98 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 63 ரன்களுடனும் களத்தில் நிற்கிறார்கள். ஆஸ்திரேலியா 133 ரன்கள் முன்னிலை கண்டு வலுவாக நிலையில் இருக்கிறது. 4–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story