தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியா 209 ரன்களில் ஆல்–அவுட்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியா 209 ரன்களில் ஆல்–அவுட்
x
தினத்தந்தி 6 Jan 2018 10:00 PM GMT (Updated: 6 Jan 2018 8:39 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாண்ட்யாவின் அதிரடியால் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 209 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாண்ட்யாவின் அதிரடியால் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 209 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது.

கேப்டவுன் டெஸ்ட்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளமான கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 28 ரன்களுடன் ஊசலாடியது. புஜாரா (5 ரன்), ரோகித் சர்மா (0) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘ஆப்–சைடுக்கு வெளியே எகிறும் பந்துகளை தொடக்கூடாது, ரன் எடுப்பதை காட்டிலும் விக்கெட்டை தக்க வைப்பது முக்கியம்’ என்ற நோக்குடன் இந்திய வீரர்களான புஜாராவும், ரோகித் சர்மாவும் தொடர்ந்து விளையாடினர். தென்ஆப்பிரிக்காவின் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தொடுத்த புயல்வேக தாக்குதலை முதல் ஒரு மணி நேரம் பெரும்பாடு பட்டு சமாளித்தனர். 27–வது ஓவரில் நமது அணி 50 ரன்களை தொட்டது.

புஜாரா 26 ரன்

தடுமாற்றத்துடன் விளையாடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா (11 ரன், 59 பந்து) காஜிசோ ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பலன் இல்லை. அடுத்து அஸ்வின் வந்தார்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. முதல் 2 மணி நேரத்தில் 25 ஓவர்களில் இந்திய வீரர்கள் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு சந்தித்த முதல் பந்திலேயே புஜாரா (26 ரன், 92 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். பிலாண்டர் ஆப்–ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட்டை தாரை வார்த்தார். பிலாண்டர் தனது அடுத்த ஓவரில் அஸ்வினையும் (12 ரன்) காலி செய்தார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (0) ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை தடுப்பதற்கு பதிலாக பேட்டை உயர்த்த, எல்.பி.டபிள்யூ. ஆக நேரிட்டது. சில வீரர்கள் தன்னம்பிக்கையை இழந்து ஒரு வித அச்ச உணர்வுடன் விளையாடியதை பார்க்க முடிந்தது.

காப்பாற்றிய ஜோடி

92 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை (41.4 ஓவர்) இழந்து தத்தளித்த இந்திய அணி 100 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. இந்த இக்கட்டான சூழலில் ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும், புவனேஷ்வர்குமாரும் கைகோர்த்தனர். பாண்ட்யாவும் வந்த வேகத்தில் நடையை கட்டி இருக்க வேண்டியது. அவர் 15 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ‘கல்லி’ திசையில் நின்ற டீன் எல்கர் கோட்டை விட்டார்.

மறுவாழ்வு கிடைத்த உற்சாகத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் குதித்தார். ஆடுகளத்தில் பந்து சரமாரியாக பவுன்ஸ் ஆனதால், பாண்ட்யா ஸ்டம்பை விட்டு விலகியபடி சில ஷாட்டுகளை அற்புதமாக நொறுக்கினார்.

இந்த கூட்டணியை உடைக்க தென்ஆப்பிரிக்கா பலவாறு முயற்சித்தது. என்றாலும் அவர்களை கச்சிதமாக எதிர்கொண்டு ரன்களை சேகரித்த இவர்கள் அணியை சரிவில் இருந்து மீட்டு கவுரவமான நிலைக்கு கொண்டு வந்தனர். அணியின் ஸ்கோர் 191 ரன்களாக உயர்ந்த போது, புவனேஷ்வர்குமார் 25 ரன்களில் (86 பந்து, 4 பவுண்டரி) மோர்கலின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இவர்கள் 9–வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பாண்ட்யா 93 ரன்

மறுமுனையில் பாண்ட்யா தனது 2–வது சதத்தை நெருங்கினார். அவரை மூன்று இலக்கு ஸ்கோரை எட்ட விடக்கூடாது என்பதற்காக தென்ஆப்பிரிக்க பவுலர்கள் முழுமூச்சுடன் வரிந்து கட்டி நின்றனர். ரபடா வீசிய ஒரு பந்து அவரது வயிற்றை பதம் பார்த்தது. வலியால் அவதிப்பட்ட பாண்ட்யா (93 ரன், 95 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசியில் அவரது பந்து வீச்சுக்கே இரையானார். பேட்டில் உரசிக்கொண்டு பறந்த பந்து விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. அவரது விக்கெட்டை வீழ்த்தியதும் ரபடாவுக்கு, அந்த அணியின் கேப்டன் பிளிஸ்சிஸ் முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 73.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், ரபடா தலா 3 விக்கெட்டுகளும், ஸ்டெயின், மோர்கல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். குதிகால் வலியால் பாதிக்கப்பட்ட ஸ்டெயின் பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறி விட்டார்.

அடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்க அணி 2–வது இன்னிங்சை ஆடியது.


Next Story