ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி, 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது


ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி, 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது
x
தினத்தந்தி 8 Jan 2018 7:20 AM GMT (Updated: 8 Jan 2018 7:20 AM GMT)

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Ashes | #AUSvsENG

சிட்னி,

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 346 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 193 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 38 ரன்களுடனும், கம்மின்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, மறுபடியும் தகிடுதத்தம் போட்டது. ஸ்டோன்மான் (0), அலஸ்டயர் குக் (10 ரன்), ஜேம்ஸ் வின்ஸ் (18 ரன்), டேவிட் மலான் (5 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் தோல்வியின் பாதையில் பரிதவித்தது. 

இன்றைய 5-வது நாள் ஆட்டம் துவங்கியதும், இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை வரிசையாக தாரைவார்த்தது. ஜோ ரூட் 58 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினார். பேர்ஸ்டோ 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடையை கட்டினர். 88.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம்,  ஒரு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்த போட்டியில்  ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலிய அணியைச்சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் பெற்றார். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பெற்றார்.    #Ashes |  #AUSvsENG


Next Story