கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + Aussie's last Test against England

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி
ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
சிட்னி,

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 346 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது.


பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாளில் தேனீர் இடைவேளைக்கு முன்பாக 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 4-வது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. கேப்டன் ஜோ ரூட் 42 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ 17 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 210 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடியது. உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜோரூட் தொடக்கத்தில் களம் இறங்கவில்லை. மொயீன் அலி, பேர்ஸ்டோவுடன் இணைந்து களம் கண்டார்.

மொயீன் அலி 13 ரன்னில் நாதன் லயன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து கேப்டன் ஜோரூட் களம் இறங்கினார். 13 ஓவர்கள் ஆடிய ஜோரூட் உடல் வலி அதிகரித்ததால் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறினார். அவர் உடனடியாக சிகிக்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜோரூட் 167 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 58 ரன்கள் சேர்த்தார். அப்போது அணியின் ஸ்கோர் 144 ரன்னாக இருந்தது. நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோ (38 ரன்) கம்மின்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து டாம் குர்ரனுடன் இணைந்த ஸ்டூவர்ட் பிராட் (4 ரன்), மாசன் கிரேன் (2 ரன்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (2 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.1 ஓவர்களில் 180 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் குர்ரன் 23 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த் ஆகிய இடங்களில் நடந்த முதல் 3 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று இருந்தது. மெல்போர்னில் நடந்த 4-வது போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த போட்டி தொடரில் அவர் மொத்தம் 23 விக்கெட்டுகள் சாய்த்தார். 687 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் தொடர்நாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எல்லா பவுலர்களும் விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். பந்து வீச்சில் நாங்கள் ஒருநபரை மட்டும் நம்பி இருக்கவில்லை. நாங்கள் அதிக ரன்களை குவித்தது முக்கியமானதாகும். கடினமான சூழ்நிலையிலும் எங்களது பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டனர். ஒவ்வொரு வீரரின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.