ரஹானேவை ஒதுக்கி விட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளித்தது ஏன்?


ரஹானேவை ஒதுக்கி விட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளித்தது ஏன்?
x
தினத்தந்தி 9 Jan 2018 11:30 PM GMT (Updated: 9 Jan 2018 7:14 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ரஹானேவை ஒதுக்கிவிட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளித்தது ஏன் என்பது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

கேப்டவுன்,

கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும், தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை நெருங்க முடியாமல் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 42.4 ஓவர்களில் 135 ரன்களில் சுருண்டு போனது.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கான ஒரு அரிய வாய்ப்பு கனிந்த போதிலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிய இந்திய பேட்ஸ்மேன்கள் மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘துணை கேப்டன் ரஹானேவை கழற்றி விட்டது தவறான முடிவு; அவர் வெளிநாட்டில் நேர்த்தியாக ஆடக்கூடியவர்’ என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை பட்டியலிட்டுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரஹானே, உள்நாட்டில் 33.63 ரன் சராசரியையும், வெளிநாட்டில் 53.44 ரன் சராசரியையும் கொண்டிருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூட, ‘இந்த டெஸ்டுக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரோகித் சர்மாவை களம் இறக்கியதை கண்டு ஆச்சரியமடைந்தோம். குறிப்பாக பும்ரா இந்த போட்டியில் ஆடுவார் என்று நினைக்கவே இல்லை. ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக பந்து வீசி வருவதை அறிவோம். அதனால் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மற்ற இந்திய பவுலர்களை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி எங்களை தயார்படுத்தி கொண்டோம்.

இதே போல் ரஹானேவைவிட ரோகித் சர்மாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதும் வியப்பு அளித்தது. ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா ஓரளவு பார்மில் இருப்பதால் அதன் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கலாம்.’ என்றார்.

இது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘வீரர்களின் தற்போதைய ஆட்டத்திறனை (பார்ம்) வைத்தே ஆடும் லெவன் அணியை தேர்வு செய்தோம். ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்து இருந்தார். மேலும் நன்றாக ஆடினார். தோல்வி காணும் போது, இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று விமர்சனங்கள் வருவது சகஜம் தான். ஆனால் ஆடும் லெவன் அணி வீரர்களின் நடப்பு பார்மை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் தான் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.’ என்றார்.

இதற்கிடையே முதலாவது டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட இந்திய வீரர்கள் ரஹானே, லோகேஷ் ராகுல் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தங்களது சுய விருப்பத்தின் பேரில் கேப்டவுன் மைதானத்தில் சுமார் 1½ மணி நேரம் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். மாற்று விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலும் பயிற்சி மேற்கொண்டார். அவர்களுக்கு, உதவி பயிற்சியாளர்கள் சஞ்சய் பாங்கர், பரத் அருண் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன், இந்த தொடர் முழுவதும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். கிப்சன் கூறுகையில், ‘வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் செயல்படக்கூடிய பயிற்சியாளர் நான். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் போது அணியின் கலவை சரியாக இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். எதிர்வரும் டெஸ்ட் போட்டிக்கான சீதோஷ்ண நிலையும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது கைகூடாவிட்டால் வேறு வழியை கையாள வேண்டும். எதுவாகிலும் இந்த தொடர் முழுவதும் எப்படி 4 வேகப்பந்து வீச்சாளர்களை களத்திற்கு கொண்டு வருவது என்பதை தான் கவனத்தில் கொள்வோம்’ என்றார்.

Next Story