தென்ஆப்பிரிக்க அணி 269 ரன்கள் சேர்ப்பு


தென்ஆப்பிரிக்க அணி 269 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 14 Jan 2018 12:00 AM GMT (Updated: 13 Jan 2018 7:19 PM GMT)

செஞ்சூரியனில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.

செஞ்சூரியன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக ஷிகர் தவான், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், பார்த்தீவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா இடம் பெற்றனர். இதில் கேப்டவுன் டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்டுகளுடன், 36 ரன்களும் எடுத்து அசத்திய புவனேஷ்வர்குமார் கழற்றிவிடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்கள் இல்லாத இந்த ஆடுகளத்தில் பந்து ‘ஸ்விங்’ ஆகாது என்ற நோக்கில் புவனேஷ்வர்குமார் நீக்கப்பட்டதாக தெரிகிறது. தென்ஆப்பிரிக்க அணியில் காயம் அடைந்த ஸ்டெயினுக்கு பதிலாக புதுமுக பவுலர் நிகிடி சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி எய்டன் மார்க்ராமும், டீன் எல்கரும் தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கினர். அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடியை முதல் 2 மணி நேரம் அசைக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளையின் போது அந்த அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்திருந்தது.

களத்தில் பந்து ஓரளவு பவுன்ஸ் ஆன போதிலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளித்தனர். ஆனால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கும் ஒத்துழைத்தது வியப்பூட்டியது. அஸ்வின் வீசிய பந்துகள் நன்கு சுழன்று திரும்பின.

அணியின் ஸ்கோர் 85 ரன்களாக உயர்ந்த போது, தொடக்க ஜோடி பிரிந்தது. டீன் எல்கர் (31 ரன்), அஸ்வின் பந்து வீச்சை சில அடி இறங்கி வந்து அடித்த போது பந்து அருகில் நின்ற விஜய் மீது பட்டு அவரிடம் சிக்கிக் கொண்டது. அடுத்து ஹஷிம் அம்லா ஆட வந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடி சதத்தை நோக்கி முன்னேறிய மார்க்ராமும் (94 ரன், 150 பந்து, 15 பவுண்டரி) அஸ்வினின் சுழலுக்கு இரையானார். 3-வது விக்கெட்டுக்கு வந்த டிவில்லியர்ஸ் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் (20 ரன்), இஷாந்த் ஷர்மா ‘ஆப்-சைடு’ வெளியே வீசிய பந்தை அடித்த போது பந்து பேட்டின் உள் பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதன் பின்னர் கேப்டன் பாப் டு பிளிஸ்சிங் களம் புகுந்தார்.

அணியின் ஸ்கோர் 246 ரன்களை எட்டிய போது, அம்லா (82 ரன், 153 பந்து, 14 பவுண்டரி) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிய போது, பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவினால் சூப்பராக ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த குயின்டான் டி காக் (0) அஸ்வின் பந்து வீச்சில் ‘ஸ்லிப்’பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். டி காக், சொந்த மண்ணில் டக்-அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து வந்த வெரோன் பிலாண்டர் (0) ரன்அவுட்டில் நடையை கட்டினார்.

ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 199 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்த தென்ஆப்பிரிக்க அணி இறுதிகட்டத்தில் சில விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியின் கை சற்று ஓங்கியது.

ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் சேர்த்துள்ளது. பிளிஸ்சிஸ் (24 ரன்), கேஷவ் மகராஜ் (10 ரன்) களத்தில் இருக்கிறார்கள். இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story