ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 8:28 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

மான்கானுய்,

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (பி பிரிவு) 3 முறை சாம்பியன்களான இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. கேப்டன் பிரித்வி ஷா (94 ரன்கள்), மன்ஜோத் கல்ரா (86 ரன்கள்) இணை சிறப்பாக விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தனர். சுப்மான் கில் 63 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 42.5 ஓவர்களில் 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ் 73 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கம்லேஷ் நாக்ராகோடி, ஷிவம் மாவி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்திய அணி கேப்டன் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அதேநாளில் நடந்த மற்ற லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் வெற்றி பெற்றன.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது. இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (சி பிரிவு) வங்காளதேச அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் (சி பிரிவு) இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியாவை பந்தாடியது.

Next Story