ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணிக்கு 2-வது வெற்றி கால்இறுதிக்கு முன்னேறியது


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணிக்கு 2-வது வெற்றி கால்இறுதிக்கு முன்னேறியது
x
தினத்தந்தி 16 Jan 2018 9:00 PM GMT (Updated: 16 Jan 2018 8:31 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை தோற்கடித்து

மவுன்ட் மான்கானுய்,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பப்புவா நியூ கினியாவை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 21.5 ஓவர்களில் 64 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாம் 15 ரன்னும், சிமோன் அதாய் 13 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணி அபார வெற்றி

இந்திய அணி தரப்பில் அனுகுல் ராய் 5 விக்கெட்டும், ஷிவம் மாவி 2 விக்கெட்டும், கமலேஷ் நாகர்கோடி, அர்ஷ்தீப்சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய இந்திய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பிரித்வி ஷா 39 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 57 ரன்னும், மன்ஜோத் கல்ரா 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

கால்இறுதிக்கு முன்னேற்றம்

இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்து கால்இறுதிக்கு முன்னேறியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.

‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய அயர்லாந்து அணி, பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 28.5 ஓவர்களில் 97 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஷ் லிட்டில் ஆட்டம் இழக்காமல் 24 ரன்னும், சாம் முர்பி 19 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டும், ஹசன் கான் 3 விக்கெட்டும், அர்ஷாத் இக்பால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பாகிஸ்தான் அணி வெற்றி

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சைத் ஆலம் 43 ரன்னும், கேப்டன் ஹசன் கான் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு இருந்தது. அயர்லாந்து அணி தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

இன்றைய ஆட்டங்கள்


இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான்-இலங்கை, ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே, நியூசிலாந்து-கென்யா (மூன்று ஆட்டமும் அதிகாலை 3 மணி), தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் (அதிகாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 19-ந் தேதி ஜிம்பாப்வேயை சந்திக்கிறது.

Next Story