தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரையும் இழந்தது


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரையும் இழந்தது
x
தினத்தந்தி 17 Jan 2018 10:00 PM GMT (Updated: 17 Jan 2018 8:20 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை இழந்தது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை இழந்தது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்னும், இந்திய அணி 307 ரன்னும் எடுத்தன.

287 ரன்கள் இலக்கு


28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 258 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து இருந்தது. எம்.விஜய் 9 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். புஜாரா 11 ரன்னுடனும், பார்த்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

புஜாரா ரன்-அவுட்

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதுடன் தொடரில் சமநிலையை எட்டலாம் என்ற நிலையுடன் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. புஜாரா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். எஞ்சிய 7 விக்கெட்டுகளை சாய்த்தால் தொடரை வென்று விடலாம் என்ற நோக்குடன் தென்ஆப்பிரிக்க அணியினர் துல்லியமான வேகப்பந்து வீச்சு தாக்குதலை தொடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சில் பந்து நன்கு பவுன்ஸ் ஆனது. இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினார்கள். புஜாரா (19 ரன்) 3-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடுகையில் டிவில்லியர்ஸ் எடுத்து வீசிய பந்தை குயின்டான் டி காக் பிடித்து ஸ்டம்பை நோக்கி வீச அதனை நிகிடி துரிதமாக செயல்பட்டு ரன்-அவுட் செய்தார். இந்த டெஸ்டில் புஜாரா ரன்-அவுட் ஆனது இது 2-வது முறையாகும். முதல் இன்னிங்சிலும் அவர் ரன்-அவுட் ஆகி இருந்தார். இதன் மூலம் ஒரு டெஸ்டில் 2 இன்னிங்சிலும் ரன்-அவுட் ஆன முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு புஜாரா சொந்தக்காரர் ஆனார்.

ஹர்திக் பாண்ட்யா 6 ரன்

அடுத்த 3 ஓவர்கள் கழித்து பார்த்தீவ் பட்டேல் (19 ரன்) ரபடா பந்து வீச்சை அடித்து ஆட அதனை அருமையாக டிவில்லியர்ஸ் கேட்ச் செய்து அவரை வெளியேற்றினார். அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்த ஹர்திக் பாண்ட்யா (6 ரன்) நிகிடி வீசிய பந்தை பின்னால் தூக்கி விட முயற்சித்தார். ஆனால் பந்து விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் கையில் தஞ்சம் அடைந்தது.

இதனை அடுத்து களம் கண்ட அஸ்வின் (3 ரன்) நிகிடி பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் என்ற பரிதாபமாக நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து முகமது ஷமி, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி அடித்து ஆடி அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடக்க வைத்தது.

தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி

அணியின் ஸ்கோர் 141 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா (47 ரன்கள், 74 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ரபடா பந்து வீச்சில் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். 8-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா-முகமது ஷமி ஜோடி 61 பந்துகளில் 54 ரன்கள் திரட்டியது.

பின்னர் முகமது ஷமி 28 ரன்னிலும் (24 பந்துகளில் 5 பவுண்டரியுடன்), ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்னிலும் நிகிடி பந்து வீச்சில் விரைவில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 50.2 ஓவர்களில் 151 ரன்னில் சரண்டர் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷாந்த் ஷர்மா 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்சில் விராட்கோலி 153 ரன்கள் குவித்தது பலன் இல்லாமல் போனது.

தொடரை கைப்பற்றியது

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் லுன்ஜி நிகிடி 6 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 39 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற நிகிடி அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 6-வது தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

‘மோசமான பேட்டிங்கால் தோல்வி கண்டோம்’ -விராட் கோலி

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் நல்ல இணை ஆட்டத்தை அளித்து முன்னிலை பெறுவதில் தோல்வி அடைந்தோம். நாங்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பவுலர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாமல் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர். நாங்கள் வெற்றிக்காக முயற்சித்தோம். அதுபோதுமானதாக அமையவில்லை. தென்ஆப்பிரிக்க அணியின் பீல்டிங் அருமையாக இருந்தது. அதுவே அந்த அணியின் வெற்றிக்கு காரணம் எனலாம். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் நின்று நினைத்தோம். டாஸ்சுக்கு பிறகு ஆடுகளத்தின் தன்மையில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மாற்றம் கண்டதை வீரர்களிடம் கூறினேன். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் விக்கெட்டை வேகமாக இழந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

எல்லா விஷயங்களையும் களத்திலேயே விட்டு விட விரும்புகிறேன். தொடரை இழந்து விட்டதால் நான் எடுத்த 153 ரன்கள் என்பதை பெரிதாக கருத முடியாது. நாம் வெற்றி பெற்று இருந்தால் 30 ரன்கள் எடுத்து இருந்தால் கூட பெரிதாக இருந்து இருக்கும். ஒரு அணியாக கூட்டாக வெற்றி பெற விரும்புகிறோம்.

ஆட்டத்தின் முடிவில் ஒரு அணி தோற்று தான் ஆக வேண்டும். எந்த ஒரு அணியும் எப்பொழுதும் வெற்றி பெறவே முயற்சிக்கும். அணியின் தோல்வியை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் நாம் எந்த மாதிரி விளையாடினோம் என்பது முக்கியமானது. எங்களுக்கு சாதகமாக இருந்த நிலையை நழுவவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. எளிதான முறையில் பல விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு நிறைய வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொருவரும் முழு ஆட்ட திறனை வெளிப்படுத்தினோமா? என்பதை தங்களுக்கு தானே கேட்க வேண்டியது அவசியமானதாகும். சில விஷயங்கள் சரியாக அமையாவிட்டால் அணி தேர்வு குறித்து விமர்சனங்கள் கிளம்ப தான் செய்யும். அதனை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

Next Story