சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு ஐ.சி.சி. விருது அறிவிப்பு


சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு ஐ.சி.சி. விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2018 10:00 PM GMT (Updated: 2018-01-19T02:21:47+05:30)

கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.

துபாய்,

கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.

விராட் கோலிக்கு இரட்டை விருது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2004-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

விருதுக்குரிய காலக்கட்டமாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு இறுதி வரை வீரர்களின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்படி கடந்த ஆண்டின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கான போட்டியில் இருந்த டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (இருவரும் இங்கிலாந்து) ஆகியோரை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான கேர்பீல்டு சோபர்ஸ் கோப்பையை பெறுகிறார்.

விருதுக்குரிய காலக் கட்டத்தில் விராட்கோலி டெஸ்ட் போட்டியில் 6 இரட்டை சதங்கள் உள்பட 2,203 ரன்னும் (சராசரி 77.80), ஒருநாள் போட்டியில் 7 சதம் உள்பட 1,818 ரன்னும் (சராசரி 82.63), 20 ஓவர் போட்டியில் 299 ரன்னும் குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுவதற்கும் அவரது பங்களிப்பு மகத்தானதாக அமைந்தது.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதையும் விராட் கோலி தட்டிச் சென்றார். இதற்கான பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருந்த ஹசன் அலி (பாகிஸ்தான்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோரை ஓரங்கட்டிய கோலி, இந்த விருதை 2-வது முறையாக பெறுகிறார்.

சிறந்த டெஸ்ட் வீரர் சுமித்


சிறந்த டெஸ்ட் வீரர் விருது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் வசம் ஆகியுள்ளது. அவர் 16 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8 சதம், 5 அரைசதம் உள்பட 1,875 ரன்கள் (சராசரி 78.12) திரட்டி இருக்கிறார். ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் 947 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன், ஒட்டுமொத்தத்தில் அதிக புள்ளிகள் குவித்த வீரர்களில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுக்கு (961 புள்ளிகள்) அடுத்த இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கான பட்டியலில் அஸ்வின், புஜாரா, விராட்கோலி (மூவரும் இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும் அவர்களை, ஸ்டீவன் சுமித் எளிதில் முந்தி விட்டார்.

யுஸ்வேந்திர சாஹல்

சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் அள்ளியதன் மூலம் யுஸ்வேந்திர சாஹல் இந்த விருதுக்குரியவர் ஆகியிருக்கிறார்.

அசோசியேட் அணிகளுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ரஷித் கானும் (ஆப்கானிஸ்தான்), வளரும் சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக ஹசன் அலியும் (பாகிஸ்தான்), சிறந்த நடுவராக மரைஸ் எராஸ்மஸ்சும் (தென்ஆப்பிரிக்கா) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி.யின் கனவு அணிகளும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. டெஸ்ட் அணியில் விராட்கோலி, புஜாரா, அஸ்வின், ஒருநாள் அணியில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இந்திய வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இரண்டு கனவு அணிக்கும் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பாகும். கடந்த ஆண்டில் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்த இலங்கை அணி வீரர்களில் ஒருவர் கூட இவ்விரு கனவு அணிகளிலும் இடம் பிடிக்கவில்லை.

கனவு அணிகள்

ஐ.சி.சி. கனவு டெஸ்ட் அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன், இந்தியா), டீன் எல்கர் (தென்ஆப்பிரிக்கா) டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), புஜாரா (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர், தென்ஆப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).

ஒரு நாள் போட்டி கனவு அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன், இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரோகித் சர்மா (இந்தியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர், தென் ஆப்பிரிக்கா) பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), ஹசன் அலி (பாகிஸ்தான்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

மிகப்பெரிய கவுரவம்


ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து 29 வயதான இந்திய கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘அனேகமாக உலக கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட் வீரர்கள் பெறும் மிகப்பெரிய விருது இது தான். இந்த விருதை இரண்டு இந்தியர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பெறுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். கடந்த ஆண்டில் அஸ்வின் சிறந்த வீரராக தேர்வு ஆனார். இந்த தடவை அந்த விருதை நான் முதல்முறையாக பெற உள்ளேன். உண்மையிலேயே இது எனக்கு மிகப்பெரிய கவுரவமாகும். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் அணிக்காக கடினமாக உழைக்கிறார்கள். அதை இந்த வகையில் அங்கீகரிக்கும் ஐ.சி.சி.க்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை நான் ஏற்கனவே 2012-ம் ஆண்டு பெற்று இருக்கிறேன்.’ என்றார்.

விராட் கோலியை தவிர்த்து டிராவிட் (2004-ம் ஆண்டு), சச்சின் தெண்டுல்கர் (2010-ம் ஆண்டு), அஸ்வின் (2016-ம் ஆண்டு) ஆகிய இந்திய வீரர்களும் ஆண்டின் சிறந்த வீரர் விருதை பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

Next Story