கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிஜிம்பாப்வேயை ஊதித்தள்ளியது + "||" + Junior World Cup Cricket: Indian team win 'hatrick'

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிஜிம்பாப்வேயை ஊதித்தள்ளியது

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிஜிம்பாப்வேயை ஊதித்தள்ளியது
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்திய அணி தொடர்ந்து 3-வது வெற்றியை (‘ஹாட்ரிக்’) பதிவு செய்தது.
மவுன்ட் மாங்கானு,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்திய அணி தொடர்ந்து 3-வது வெற்றியை (‘ஹாட்ரிக்’) பதிவு செய்தது.

இந்தியா வெற்றி

12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் மூன்று முறை சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக்கில் ஜிம்பாப்வேயை நேற்று எதிர்கொண்டது.


இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் (31 ஓவர்) இருந்ததை பார்த்த போது, 200 ரன்களை எளிதில் தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் அடுத்த 44 ரன்னுக்குள் எஞ்சிய 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஜிம்பாப்வே 48.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அனுகுல் ராய் 4 விக்கெட்டுகளும், அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 21.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 155 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் 56 ரன்களும் (73 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மான் கில் 90 ரன்களும் (59 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர்.

கால்இறுதி

ஏற்கனவே ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியாவை துவம்சம் செய்த இந்திய அணிக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாக அமைந்தது.

‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணி வருகிற 26-ந்தேதி நடக்கும் கால்இறுதியில் வங்காளதேசத்துடன் மோத வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணி வெளியேற்றம்

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 311 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை பந்தாடியது. இதில் நாதன் மெக்ஸ்வீனி அடித்த சதத்தின் (156 ரன்) உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பப்புவா நியூ கினியா 24.5 ஓவர்களில் 59 ரன்னில் சுருண்டு போனது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ரால்ஸ்டான் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பவுலரின் 2-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

2-வது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் கால்இறுதிக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே (2 புள்ளி), பப்புவா நியூ கினியா (3 ஆட்டத்திலும் தோல்வி) அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

‘டி’ பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் கால்இறுதியை உறுதி செய்தது. 2 புள்ளி மட்டுமே பெற்ற இலங்கை அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி) போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.