ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: பட்லரின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: பட்லரின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 21 Jan 2018 9:15 PM GMT (Updated: 21 Jan 2018 9:00 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பட்லரின் அதிரடி சதத்தின் உதவியுடன் வெற்றிக்கனியை பறித்த இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பட்லரின் அதிரடி சதத்தின் உதவியுடன் வெற்றிக்கனியை பறித்த இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.

பட்லர் சதம்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஜாசன் ராய் (19 ரன்), பேர்ஸ்டோ (39 ரன்), ஜோ ரூட் (27 ரன்), கேப்டன் இயான் மோர்கன் (41 ரன்) உள்பட 6 முன்னணி வீரர்கள் 189 ரன்னுக்குள் (38.1 ஓவர்) பெவிலியன் திரும்பினர்.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும், கிறிஸ் வோக்சும் கைகோர்த்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். அவ்வப்போது சிக்சர்களும் பறக்க விட்டனர். இந்த கூட்டணியை ஆஸ்திரேலிய பவுலர்களால் கடைசி வரை உடைக்க முடியவில்லை.

ஜோஸ் பட்லருக்கு 97 ரன்னில் இருந்த போது எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்டது. பின்னர் டி.ஆர்.எஸ். முறைப்படி அவர் அப்பீல் செய்த போது, பந்து பேட்டில் உரசிக்கொண்டு காலுறையில் பட்டது தெரியவந்தது. இதனால் தப்பிபிழைத்த பட்லர் கடைசி பந்தில் 2 ரன் எடுத்து தனது 5-வது சதத்தை நிறைவு செய்தார். முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 102 ரன்கள் திரட்டினர். ஜோஸ் பட்லர் 100 ரன்களுடனும் (83 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் வோக்ஸ் 53 ரன்களுடனும் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து வெற்றி

பின்னர் கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. துணை கேப்டன் டேவிட் வார்னர் 8 ரன்னிலும், கேமரூன் ஒயிட் 17 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இருப்பினும் ஆரோன் பிஞ்ச் (62 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (45 ரன்), மிட்செல் மார்ஷ் (55 ரன்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்ட போதிலும் முக்கியமான கட்டத்தில் இவர்கள் ஆட்டம் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் (56 ரன்), விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் (31 ரன்) போராடிய போதிலும் இலக்கை அடைய முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. ஏற்கனவே மெல்போர்ன், பிரிஸ்பேனில் நடந்த ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில், இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை வசப்படுத்தியது இதுவே முதல் முறையாகும். ஆஷஸ் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அதற்கு ஒரு நாள் தொடரில் பழிதீர்த்துள்ளது.

அடுத்த ஆட்டம்

உள்நாட்டில் ஒரு நாள் தொடர் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி முதல் 3 ஆட்டங்களில் தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும். இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி வருகிற 26-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது.

Next Story