முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் சுரேஷ்ரெய்னா சதத்தால் உத்தரபிரதேச அணி வெற்றி


முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் சுரேஷ்ரெய்னா சதத்தால் உத்தரபிரதேச அணி வெற்றி
x
தினத்தந்தி 22 Jan 2018 9:45 PM GMT (Updated: 22 Jan 2018 7:26 PM GMT)

உத்தரபிரதேச அணி, கொல்கத்தாவில் நேற்று நடந்த சூப்பர் லீக் ஆட்டத்தில் பெங்காலை எதிர்கொண்டது. #SureshRaina #cricket

கொல்கத்தா,

முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேச அணி, கொல்கத்தாவில் நேற்று நடந்த சூப்பர் லீக் ஆட்டத்தில் பெங்காலை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. சமீபகாலமாக ரன் அடிக்க முடியாமல் திணறியதாலும், உடல் தகுதி தேர்வில் தோல்வியை தழுவியதாலும் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் சுரேஷ்ரெய்னா நேற்று அருமையாக ஆடி அசத்தினார். சுரேஷ்ரெய்னா 59 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சருடன் 126 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 20 ஓவர் போட்டியில் தமிழக வீரர் எம்.விஜய் 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 127 ரன்கள் அடித்ததே இந்திய வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது. பின்னர் ஆடிய பெங்கால் அணி 16.1 ஓவர்களில் 160 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் உத்தரபிரதேச அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்தரபிரதேச அணியின் கேப்டனான 31 வயது சுரேஷ்ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டு இருக்கும் 3 வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story