தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?
x
தினத்தந்தி 23 Jan 2018 11:00 PM GMT (Updated: 23 Jan 2018 8:29 PM GMT)

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜோகன்னஸ்பர்க்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

முதல் இரு போட்டியிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சரியாக செய்து வெற்றி வாய்ப்பை உருவாக்கி தந்தனர். ஆனால் 208 ரன், 287 ரன்கள் இலக்கை கூட நெருங்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர். கேப்டவுனில் ஹர்திக் பாண்ட்யாவும் (93 ரன்), செஞ்சூரியனில் கேப்டன் விராட் கோலியும் (153 ரன்) தாக்குப்பிடித்து ஆடினர். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணி பவுலர்களின் பிடியில் சிக்கி விட்டனர்.

2-வது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் நீக்கப்பட்டதும், வெளிநாட்டு மண்ணில் நேர்த்தியாக விளையாடக்கூடிய ரஹானேவை ஓரங்கட்டியதும் கேப்டன் கோலியின் தவறான முடிவு என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால் நிச்சயம் இந்த டெஸ்டில் மாற்றம் இருக்கும். ரஹானே, இந்த தொடரில் முதல் முறையாக சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

தென்ஆப்பிரிக்க வீரர்களின் விருப்பப்படி இந்த ஆடுகளத்தில் புற்கள் விடப்பட்டு, வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி இதுவரை தோற்றது கிடையாது. அதே போல் 7-வது முறையாக தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி ஒரு முறையும் முழுமையாக (ஒயிட்வாஷ்) தொடரை இழந்ததில்லை. இந்த டெஸ்டில் ஆறுதல் வெற்றியோ, டிராவோ பெற்று அவ்விரு பெருமைகளையும் இந்தியா தக்க வைக்குமா? அல்லது தென்ஆப்பிரிக்காவின் புயல்வேகத்துக்கு மறுபடியும் சிதறிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை இந்திய அணியை ‘ஒயிட்வாஷ்’ செய்ய வரிந்து கட்டி நிற்பார்கள். அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் பெலக்வாயோ சேர்க்கப்படலாம்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது 3-0 என்ற கணக்கில் தோற்கடிக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அதுவே எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அதே சமயம் சரிவில் இருந்து மீள துடிக்கும் இந்திய வீரர்களிடம் இருந்து மறுபடியும் சவாலை எதிர்பார்க்கிறோம். முதல் இரு டெஸ்டுகளிலும் இரு அணியினரும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அது போலவே இங்கும் நடக்கும். முந்தைய போட்டிகளில் இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது பேட்ஸ்மேன்கள் அளித்த பார்ட்னர்ஷிப் தான். இந்த டெஸ்டிலும் பார்ட்னர்ஷிப் தான் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்’ என்றார்.

போட்டி நடக்கும் 5 நாட்களும் ஜோகன்னஸ்பர்க்கில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய வானிலை, வேகப்பந்து வீச்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், மார்க்ராம், அம்லா, டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), குயின்டான் டி காக், கேஷவ் மகராஜ் அல்லது பெலக்வாயோ, வெரோன் பிலாண்டர், காஜிசோ ரபடா, மோர்னே மோர்கல், நிகிடி.

இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அஸ்வின் அல்லது ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் அல்லது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா அல்லது பும்ரா.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

Next Story