டோனியிடம் சர்ப்ராஸ் அறிவுரை கேட்க வேண்டும் முகமது யூசப் யோசனை


டோனியிடம் சர்ப்ராஸ் அறிவுரை கேட்க வேண்டும்  முகமது யூசப் யோசனை
x
தினத்தந்தி 24 Jan 2018 10:37 AM GMT (Updated: 24 Jan 2018 10:37 AM GMT)

அணியை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என இந்திய வீரர் டோனியிடம் சர்ப்ராஸ் அறிவுரை கேட்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசப் யோசனை தெரிவித்து உள்ளார். #Dhoni #SarfrazAhmed

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த ஐந்து ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்திடம், பாகிஸ்தான் ஒயிட்வாஷ் ஆகி மோசமான தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் 20 ஓவர்  போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால், கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. 

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இதன் பிறகு, பாகிஸ்தானின் மூன்றுவித கிரிக்கெட் அணிக்கும் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது அவரது அணி தொடர் தோல்விகளை சந்தித்து உள்ளது.

இதனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியிடம் இருந்து சர்ப்ராஸை ஆலோசனை கேட்க, பாகிஸ்தான் முன்னாள்  வீரர் முகமது யூசப் யோசனை கூறியுள்ளார். 

இது குறித்து முகமது யூசுப் கூறியதாவது:-

 "சர்ப்ராஸ், அவரது உடற்பயிற்சி மற்றும் திறமைகளை  மெருகேற்ற வேண்டும். ஏனெனில், அணியில் நல்ல பார்மில் இருக்கும் முன்னணி வீரர் அவர். டோனி, இந்திய அணியை வழி நடத்தியதில் அனைவரையும் நீண்ட காலமாக பிரமிக்க வைத்து வருகிறார். கேப்டனாக மட்டும் இல்லாமல் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். டோனியிடம் இருந்து சர்ப்ராஸ் நிறைய கற்றுக் கொள்ளலாம். 

டோனியை தொடர்பு கொண்டு எப்படி இந்த சூழ்நிலையை கையாளுவது என்று யோசனை கேட்பதில் எந்த தவறும் இல்லை. விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருந்து கொண்டு அணியையும் வழி நடத்துவது என்பது அதனை எளிதான காரியமில்லை. டோனியின் பல வெற்றிகளுக்கு பின்னால், அவர் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை கையாண்டுள்ளார். இப்போதும் கையாண்டு வருகிறார். இதனால், தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சர்ப்ராஸுக்கு கூறி வழி நடத்த டோனியால் முடியும்" என்று தெரிவித்தார்.

Next Story