ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 24 Jan 2018 9:30 PM GMT (Updated: 24 Jan 2018 7:45 PM GMT)

பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. #Cricket

கிறைஸ்ட்சர்ச்,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த 2-வது கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மாக்வித் 60 ரன்னும், ஜாசன் நிமான்ட் 36 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது முசா 3 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 2 விக்கெட்டும், அர்ஷாத் இக்பால், ஹசன்கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அலி சர்யாப் ஆசிப் 111 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜாசன் நிமான்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். பாகிஸ்தான் வீரர் அலி சர்யாப் ஆசிப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Next Story