தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி 187 ரன்னில் சுருண்டது


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி 187 ரன்னில் சுருண்டது
x
தினத்தந்தி 24 Jan 2018 10:15 PM GMT (Updated: 24 Jan 2018 7:55 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது. #INDvsSA #cricket

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்து விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் என்பதால் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புவனேஷ்வர்குமார், ரஹானே சேர்க்கப்பட்டனர். தென்ஆப்பிரிக்க அணியில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் கழற்றி விடப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் பெலக்வாயோ இடம் பெற்றார்.

இந்த தொடரில் முதல் முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி முரளிவிஜயும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

புற்களுடன் கூடிய இந்த ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் தொடுத்த தாக்குதலில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனதுடன், சரமாரியாக சீறிப்பாய்ந்தது. ‘ஸ்விங்’ ஆன பந்துகளை எதிர்கொள்ளவே இந்திய பேட்ஸ்மேன்கள் பயங்கரமாக திண்டாடினர். ராகுல் (0), விஜய் (8 ரன்) இருவரும் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் சிக்கினர்.

இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்தனர். புஜாரா எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். இதே போல் கோலி 11 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பிலாண்டர் நழுவ விட்டார்.

கடினமான சீதோஷ்ண நிலையில் புஜாரா, முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். நிறைய பந்துகளை அவர் தொடவே இல்லை. முதல் ஒரு மணி நேரத்தில் அவர் ஒரு ரன் கூட எடுக்காததால் அவர் எப்போது ரன் எடுப்பார் என்று, ரசிகர்களுக்கு ஆர்வம் உண்டானது. ஒரு வழியாக தான் சந்தித்த 54-வது பந்தில் புஜாரா ரன் கணக்கை தொடங்கினார். பிலாண்டரின் பந்து வீச்சு தான் இந்திய பேட்ஸ்மேன்களை மிரள வைத்தது. அவர் வீசிய முதல் 8 ஓவர்களில் 7 ஓவரை மெய்டனாக்கினார்.

இத்தகைய ஆடுகளங்களில் எகிறும் பந்துகளை துல்லியமாக கணித்து செயல்படாவிட்டால் பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச் ஆகும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டி இருந்தது. மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பிறகு கேப்டன் கோலி கொஞ்சம் வேகம் காட்டினார். 32 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது வழங்கிய கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்ஸ் தவற விட்டார். மறுபடியும் அதிர்ஷ்டம் பெற்ற கோலி தனது 16-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஸ்கோர் 97 ரன்களை எட்டிய போது, கோலி (54 ரன், 106 பந்து, 9 பவுண்டரி) நிகிடி வீசிய பந்தை நேர்முனையில் பவுண்டரிக்கு விரட்டுவதற்கு முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டில் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்சிடம் சென்றது. இந்த முறை அவர் கேட்ச் செய்து முந்தைய தவறுக்கு பரிகாரம் தேடிக்கொண்டார். அடுத்து வந்த ரஹானே 3 ரன்னில் கேட்ச் ஆனார்.

ஆனால் பவுலர் பிலாண்டர் காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால் தொடர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரஹானே 9 ரன்னில், மோர்கலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். அப்பீல் செய்து பார்த்தும் பலன் இல்லை.

மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக ஆடிய புஜாரா அரைசதத்தை கடந்தார். ஸ்கோர் 144 ரன்களாக உயர்ந்த போது, புஜாரா (50 ரன், 179 பந்து, 8 பவுண்டரி) பெலக்வாயோவின் பந்து வீச்சை தடுத்து ஆடிய போது பந்து விக்கெட் கீப்பர் டி காக்கின் கையில் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

‘பொறுமையின் சிகரம்’ நடையை கட்டியதும் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஹர்திக் பாண்ட்யா (0) பந்தை தூக்கியடிக்க முயற்சித்து ஆட்டம் இழந்தார். இறுதி கட்டத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் புவனேஷ்வர்குமார் 30 ரன்கள் (49 பந்து, 4 பவுண்டரி) சேர்த்தார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 77 ஓவர்களில் 187 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் மார்க்ராமின் (2 ரன்) விக்கெட்டை இழந்து 6 ரன் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story